Thursday, August 18, 2011

பருத்தி எண்ணெய்யும் அதன் பயன்களும் - (Cotton Seed oil and their utilization)


அறிமுகம்:
இந்தியாவில் அதிகரித்து வரும் மக்கள் தொகை பெருக்கத்திற்கேற்ப உணவுப் பொருட்களை அதிக அளவில் உற்பத்தி செய்து அத்தியாவசிய உணவுப்பொருள்களின் தேவையைப் பூர்த்தி செய்வது இன்றியமையாததாகும். இதில் நாம் அன்றாடம் உணவு பொருள் தயாரிக்க பயன்படுத்துவதில் எண்ணெய் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பெரும்பாலும் நாம் பயன்படுத்தும் எண்ணையானது கடலை, சூரியகாந்தி போன்ற எண்ணெய் வித்து பயிர்களிலிருந்து பெறப்பட்டவையே ஆகும். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் தொகை அதிகரிப்பதால் பருத்தி பயிரிலிருந்து  பெறப்பட்ட சுத்தம் செய்யப்பட்ட (Refined) எண்ணையை பயன்படுத்துவதன் மூலம் பொதுமக்களுக்கு தேவையான எண்ணை தேவையை நாமே பூர்த்தி செய்து கொள்ளலாம். இத்தகைய பருத்தி எண்ணையை பல வருடங்களுக்கு முன்பிருந்தே அமெரிக்கா, உஸ்பெகிஸ்தான் மற்றும் சீனா போன்ற நாடுகளில் சமையலுக்கு பயன்படுத்தி வருகின்றனர். தற்போது இந்தியாவில் சமையல் எண்ணைகளுக்கு இணையாக பருத்தி எண்ணையை பயன்படுத்த முடியும் என மருத்துவ நிபுணர்களாலும், உணவியல் துறை வல்லுனர்களாலும் பரிந்துரை செய்யப்பட்டு தற்பொழுது பருத்தி எண்ணைய் சமையலுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
  
பருத்தி எண்ணெய் (Cotton Seed Oil):
"வெள்ளைத் தங்கம்" (White gold) என்றழைக்கப்படும் பருத்தி பயிரானது இதற்கு முன்பு பருத்தி  இழைக்காக  மட்டும் பயிரிடப்பட்டு வந்தது. ஆனால் தற்போது பருத்தி விதையிலிருந்து  பெறப்பட்ட சுத்திகரிப்பு செய்த எண்ணெய்யானது சமையலுக்கு பயன்படுத்தப்படுவதால் பணப்பயிரான பருத்தியின் முக்கியத்துவம் மேன்மேலும் அதிகரித்து வருகிறது.

பொதுவாக பருத்தி விதையிலிருந்து 15-25 சதவிகிதம் எண்ணெய் கிடைக்கிறது. பருத்தி எண்ணெயில் மனிதனுக்கு தேவையான கொழுப்பு அமிலங்கலான பால்மிடிக், ஸ்டியரிக், ஒலியிக் மற்றும் லினோலெயிக் போன்றவை அதிக அளவில் காணப்படுகிறது.  பருத்தி எண்ணெயில் கொலஸ்டிரால் இல்லாததால் இது "இதய எண்ணெய்" (Heart oil) என்றும் அழைக்கப்படுகிறது.

பருத்தி எண்ணெயில்  அடங்கியுள்ள கொழுப்பு அமிலங்களின் அளவுகள்:
பருத்தி எண்ணெயில்  70 சதவிகிதம் நிறைவு செய்யப்படாத கொழுப்பு அமிலங்கள் (Unsaturated fatty acids) அடங்கியுள்ளது. இதில் 18 சதவிகிதம் ஒற்றை நிறைவு செய்யப்படாத கொழுப்பு அமிலம் மற்றும் 52 சதவிகிதம் பல நிறைவு செய்யப்படாத கொழுப்பு அமிலங்கள் (Poly Unsaturated fatty acids)   உள்ளடக்கியதே ஆகும். மேலும்பருத்தி எண்ணெயில் 26 சதவிகிதம் நிறைவு செய்த (அ) பூரித்த (Saturated) பால்மிடிக் மற்றும் ஸ்டியரிக் அமிலங்கள் அடங்கியுள்ளது.

 பருத்தி எண்ணெயின் பயன்கள் - (Uses of Cotton Seed Oil )

§  பருத்தி எண்ணெயில் அதிக அளவு வனஸ்பதி மற்றும் டால்டா தயாரிப்பதிலும் மற்றும் 5-10 சதவிகித பருத்தி எண்ணைய் சோப்பு தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
§  சுத்திகரிப்பு செய்த (Refined) பருத்தி எண்ணெயானது நல்ல வாசனையாக உள்ளதுடன், இது உணவின் வாசணையை குறைப்பதில்லை. 
§  பண்படாத (Crude) பருத்தி எண்ணெயானது இயந்திரங்களுக்கு உயவுப் பொருளாக (Lubrication) பயன்படுகிறது. 
§    பருத்தி எண்ணெயில் வைட்டமின் "ஈ" (Vitamin E) அதிக அளவில் உள்ளது. 
§  பருத்தி எண்ணெயில் தயாரிக்கப்பட்ட உணவுப்பொருட்களை நீண்ட நாட்களுக்கு சேமித்து வைத்து பயன்படுத்த முடியும். 
§  இரத்த தந்துகிகளின் (Blood vessels) சுருங்கி விரியும் தன்மைக்கு காரணமான லினோலெயிக் (Linoleic) என்ற கொழுப்பு அமிலமானது பருத்தி எண்ணெயில் அதிகமாக இருப்பதால் இது இதய நோயை குறைக்க இயலும். எனவே, இந்த எண்ணெயானது அமெரிக்க மருத்துவ நிபுணர்களால் சிறந்த எண்ணையாக பரிந்துரை செய்யப்படுகிறது. 
§  பருத்தி எண்ணெயிலிருந்து எடுக்கப்படும் "அசிட்டோ கிளிசரைடு" என்ற வேதிப்பொருளானது வெளிநாடுகளில் அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பதற்கு பயன்படுகிறது.

நன்றி: நான், என்னுடைய முதுநிலை வேளாண்மை பட்டய படிப்பின்போது பருத்தி விதையில் எண்ணையின் அளவை மரபியல் நுட்பம் மூலம் அதிகரிப்பது பற்றிய ஆராய்ச்சி செய்து ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்டுள்ளேன். மேலும் என்னுடைய ஆராய்ச்சியுடன் தொடர்புடைய இந்த கட்டுரையை அன்னை தமிழில் வெளியிடுவதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். இந்த ஆய்வுக்கு வழிகாட்டியாக விளங்கிய தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் பயிர்இனப்பெருக்கம் மற்றும் மரபியல் (Plant Breeding and Genetics) துறை பேராசிரியர்களான முனைவர் இரா. இரவிகேசவன், முனைவர் அ. இராமலிங்கம்  மற்றும் முனைவர் ந. சிவசாமி  அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை  தெரிவித்து கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

அறிவியல் வழியே தமிழ் வளர்ப்போம்! அன்னை மொழியை அழிவிலிருந்து மீட்போம்!

1 comment:

  1. கருத்து எழுதியமைக்கு நன்றி நண்பரே..

    ReplyDelete

நிலக்கடலையும் அதன் பயன்களும்

முனைவர் க. அசோக்குமார் உதவிப் பேராசிரியர் வேளாண் துறை, பிரிஸ்ட் பல்கலைக்கழகம், வல்லம், தஞ்சாவூர், 613 403. அறிமுகம்: நிலக்...