கோவை மாவட்டத்தில் வேட்டைக்காரன் புதூர் என்ற ஒரு அழகிய கிராமம் இருந்தது. அக்கிராமத்தில் கோவிந்தன் என்ற விவசாயி வாழ்ந்து வந்தார். இவருக்கு மிகச்சிறிதளவே நிலம் இருந்ததால் கூலி வேலை செய்துபிழைத்து வந்தார். கோவிந்தனுக்கு இரு மகள்கள். மூத்த மகள் ஆனந்தி 12 ஆம் வகுப்பும், இளைய மகள் ஆர்த்தி 9 ஆம் வகுப்பும் அவ்வூர் அரசு பள்ளியில் படித்து வந்தனர்.
அன்று ஒரு நாள் சனிக்கிழமை காலையில் ஏம்மா ஆனந்தி எழுந்திரிம்மா. உனக்கு அரசு பொது தேர்வுக்கு இன்னும் மூனு மாதம் தான்மா இருக்கு, நீ இனி தினமும் நன்றாக படித்தால் கண்டிப்பாக உனக்கு ஏதாவது அரசு தொழிற்கல்வி கல்லூரியில் இடம் கிடைக்கும் என்று கூறிவிட்டு கூலி வேலைக்கு கிளம்பி சென்று விட்டார். ஆனந்தியும் அப்பா சொன்னமாதிரியே தினமும் நன்றாக படித்தாள்.
நாட்கள் வேகமாக சென்றது. ஆனந்தியின் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வும் முடிந்தது. ஏம்மா ஆனந்தி பொதுத் தேர்வெல்லாம் நல்லா எழுதியிருக்கியாம்மா? தொழிற்கல்வி பயில அரசு கல்லூரியில் இடம் கிடைக்குமா? என்று கேட்டார் ஆனந்தியின் அப்பா கோவிந்தன்.
ஆம், கண்டிப்பா கிடைக்கும் அப்பா என்று கூறிவிட்டு வீட்டினுள் சென்றாள். தான் ஏழையாக இருந்தாலும் தன் மகளை எப்படியாவது கல்லூரியில் சேர்த்து படிக்க வைக்கனும் என்று உறுதியாக இருந்தார் கோவிந்தன்.
பொதுத்தேர்வு முடிவில் ஆனந்தியும் நல்ல மதிப்பெண் பெற்று தமிழ் நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் இளநிலை வேளாண்மை படிக்க இடமும் கிடைத்தது.
ஆனால் அக்கல்லூரியில் முதலாமாண்டு கல்விக்கட்டணமாய் ரூ 10 ஆயிரமும் விடுதிக்கட்டணம் ரூ 2500 ம் குறிப்பிட்ட தேதிக்குள் கட்டினால் தான் கல்லூரியில் சேர்த்துக்கொள்வோம் என்றது கல்லூரி நிர்வாகம்.
அரசு கல்லூரியிலே இவ்வளவு பணம் கட்டணுமா? என்று பல கேள்விகளை தன் மனசுக்குள்ளே கேட்டுக்கொண்டு ஊருக்கு சென்றார் தன் மகளோடு.
ஊரில் பல நபர்களிடம் கடன் கேட்டு பார்த்தார். யாரும் அவரின் அவசரத்திற்கு உதவிசெய்ய முன் வரவில்லை. சோகத்துடன் வீட்டிற்கு சென்றார். வீட்டில் ஆனந்தி தன் அப்பாவிடம் பணம்கிடைச்சுதா அப்பா? இன்னும் ஒருவாரத்திற்குள் பணத்தை கட்டியாகனும் அப்பா என்றாள். இல்லம்மா, இன்னும் பணம் கிடைக்கல என்றார் கண்ணீர் மல்க!
தன் வீட்டிற்கு முன்பிருந்த பெரிய ஆல மரத்தடியில் கட்டிலை போட்டு படுத்து கொண்டே யோசித்தார் பணத்திற்கு என்ன பண்ணுவதென்று. அவர் மனதில் ஊர் கடைசியில் வாழும் மர வியாபாரி முருகனிடம் கேட்கலையே, அவரிடம் பணம் கேட்டு பார்ப்போம் என்று அன்று சாயந்திரமே மரவியாபாரி வீட்டிற்கு சென்று தனது மூத்த மகளை கல்லூரியில் சேர்க்கும் விபரத்தை கூறி கடன் கேட்டார்.
அதற்கு, மரவியாபாரி என்கிட்ட பணம் இல்லை, பணம் உனக்கு உடனே வேணும்னா ஒரு வழி இருக்கு, உன் வீட்டிற்கு முன்னாடி உள்ள அந்த பெரிய ஆலமரத்தை என் கிட்ட விற்று விடு என பொடி வைத்து பேசினார்.
முதலில் கொடுக்க தயங்கினார் கோவிந்தன். ஏனெனில் அந்த மரம் தன் அப்பா காலத்தில் நட்டது. வெயில் காலத்தில் தான் அந்த ஆலமர நிழலில் கட்டிலை போட்டு உறங்கினதையும், தானும், தன் மகள்களும் சிறு வயதில் மரத்தை சுற்றி விளையாண்டதையும் நினைத்து பார்த்தார்.
என்னய்யா ரொம்ப யோசிக்கிற என்றார் மர வியாபாரி. ஒன்னுமில்லை, சரி அந்த ஆலமரம் எவ்வளவு விலைக்கு போகும்? என்று கேட்டார் ஆனந்தியின் அப்பா. அதற்கு அந்த மரவியாபாரி 15 ஆயிரத்துக்கு போகும், உனக்காக வேணும்னா நான் 17 ஆயிரமா நாளைக்கே தர்ரேன் என்றார் மரவியபாரி. சரி நீயே அந்த மரத்தை வெட்டிக்கோ என்று கொடுக்க மனமில்லாமல் கூறிவிட்டு வீட்டை நோக்கி நடந்தார்.
மறு நாள் வியாபாரியிடம் பணம் பெற்றுக் கொண்டு தன் மகள் ஆனந்தியை வேளாண்மை கல்லூரியில் சேர்த்து விட்டு வரும் வழியில் நிறைய மரக்கன்றுகளை வாங்கி வந்தார்.
அந்த மரக்கன்றுகளை யெல்லாம் தனக்கிருந்த கொஞ்ச நிலத்தில் நட்டு தண்ணீர் ஊற்றினார் மகிழ்ச்சியுடன். மனிதர்கள் தான் நமக்கு உதவவில்லை. ஆனால் இந்தமனிதன் (மரம்) ஆவது நமக்கு உதவியதே என்று மரத்தினை மனிதனாக நினைத்து பார்த்தார் அவர் மனதில்!.
கருத்து: இச்சிறுகதையில் மரத்தை வெட்ட வேண்டும் என்று கூறவில்லை. மரமிருந்தால் மனிதனுடைய அவசர தேவைக்கு உதவும் என்பதையும், மரம் வளர்க்க வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துதலே இச்சிறுகதையின் முக்கிய நோக்கமாகும்.
மரம் வளர்ப்போம்! மனித இனம் காப்போம்!
Nice lovely story. I ll post in my facebook link. The theme is good. Try for a short movie with your mobile or handi cam. that will take you further leap. Regards... S.R.Prabagaran
ReplyDeleteஉங்களுடைய கருத்துகளுக்கும், ஊக்கப்படுத்தியதற்கும் மிக்க நன்றி நண்பரே.
ReplyDeleteIT WAS VERY NICE SIR IM ALSO PLAN TO GIVE PLANT SAMPLINGS NEAR BY SCHOOL STUDENTS IN THIS YEAR
ReplyDeleteநன்றி. பள்ளி மாணவர்களிடையே மரக் கன்றுகளை கொடுத்து மரம் வளர்ப்பினை ஊக்கப்படுத்தும் உங்கள் செயல் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
ReplyDeleteதொடர்ந்து இவை போல மேலும் உங்களிடமிருந்து எதிர் பார்க்கப்படுகிறது. :-)
ReplyDeleteஊக்கப்படுத்தியதற்கு மிக்க நன்றி நண்பரே
ReplyDelete