Friday, August 30, 2013

மாம்பழம் - ஓர் அறிமுகம் மற்றும் மருத்துவ குணங்கள்


அறிமுகம்:

மா மரமானது மாஞ்சிபெரா  எனும் பேரினத்தை சார்ந்ததாகும். இதன் தாவரவியல் பெயரானது மாஞ்சிபெரா இன்டிகா  (Manjifera indica), இது அனகார்டியேசியே குடும்பத்தை சார்ந்த மர வகையாகும். இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் மா தோன்றினாலும் உலகில் பல்வேறு நாடுகளில் மா பயிரிடப்படுகிறதுஇந்தியாவில் பயிரிடப்படும் மா சிற்றினமானது (மாஞ்சிபெரா இன்டிகா) பொதுவாக பலவெப்பமண்டல உலக நாடுகளில் பயிரிடப்படுகிறது. மேலும் மாஞ்சிபெரா ஃபொயிடிடா (Manjifera foetida) சிற்றினமானது மழைக்காடுகள் (Rainforests) பயிரிடும் வகையாகும். இந்த வகையானது இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, மியான்மர் மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளில்  மழைக்காடுகளில் வளர்கின்றன. இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் மாம்பழம் தேசிய பழமாக  உள்ளது. மேலும் மாம்பழமானதுபழங்களின் ராஜா” (king of fruits) என்றும் அழைக்கப்படுகிறது.

இந்தியா மற்றும் தெற்காசியாவில் மாம்பழங்கள் சுமார் 6000 ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டுள்ளன என அறியப்படுகிறது. சுமார் கி.பி.1800 களில் ஆங்கிலேயர்களால் மாம்பழமானது ஐரோப்பாவிற்கு அறிமுகம் செய்யப்பட்து. மேலும்  பிரென்ச் மற்றும் போர்ச்சுகீசிய வியாபாரிகள் இந்தியாவிலிருந்து மாம்பழத்தை பிலிப்பைன்ஸ், மெக்சிகோ, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் அறிமுகம் செய்தனர். மேங்கோ (Mango) என்ற ஆங்கிலப் பெயர் 'மாங்காய்' என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து திரிந்து உருவானதே ஆகும்தமிழ் இலக்கியத்தில் மா, பலா, வாழை எனும் முக்கனிகளில்  முதல் இடத்தை பிடித்த கனி மாம்பழமாகும் ஆகும்

பயிரிடுதல் மற்றும் உற்பத்தி:

உலக அளவில்  43.7 லட்சம் ஹெக்டரில் பயிரிடப்பட்டு 312.5 லட்சம் டன் மாம்பழங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதில் இந்தியாவானது உலக அளவில் பயிரிடப்பட்ட பரப்பளவில் 46 சதவிகிதமும் மற்றும் உலக உற்பத்தியில் 40 சதவிகிதமும் பங்களித்து முதலிடத்தில் உள்ளது. உலக அளவில் மாம்பழ உற்பத்தி செய்த மற்ற முக்கிய  நாடுகளில் சீனா (11.8%), தாய்லாந்து (5.8%), மெக்ஸிக்கோ (5.4%), பாக்கிஸ்தான் (5.1%), இந்தோனேஷியா (4.5%), பிரேசில் (4.3%), மற்றும் பிலிப்பைன்ஸ் (3.2%), நைஜீரியா (2.6%) மற்றும் எகிப்து (1.2%) ஆகும்
உலகம் முழுவதும் உற்பத்தி செய்த மாம்பழ உற்பத்தியில் ஆசிய நாடுகள் 75% உற்பத்தி செய்துள்ளது. இந்தியாவில்  ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகா, .பி, தமிழ்நாடு, பீகார், ஒரிசா, மேற்கு வங்காளம் மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் மா அதிக அளவில் பயிரிடப்பட்டு உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகத்தில் தர்மபுரி, கிருஷ்னகிரி, வேலூர், தின்டுக்கல், தேனி மற்றும் சேலம் மாவட்டங்ளில் அதிக அளவிலும் மற்ற பகுதிகளில்  கனிசமான அளவில் மாம்பழம் விளைவிக்கப்படுகிறது.

முக்கியமான இரகங்கள்:

இந்திய அளவில் நீலம், பங்கனப்பள்ளி, மல்கோவா, அல்போன்சா, தஷ்யகிரி மற்றும் ருமானி போன்ற இரகங்கள் பிரபலமடைந்த இரகங்களாகும். இவற்றில் அல்போன்சா இரகமானது உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

ஊட்டச்சத்துக்கள்:
மாம்பழத்தில் பல வகையான தாவர வேதிப்பொருள்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் மிகுந்து காணப்படுகிறது. மாம்பழ கூழில் (Mango pulp) வைட்டமின்ஏ”  உற்பத்திக்கு  காரணமான பீட்டா கரோட்டின் மிக அதிக அளவிலும்  லூட்டின் மற்றும் சியாசாந்தின் போன்ற கரோட்டினாய்டுகளும் குறிப்பிட்ட அளவில் காணப்படுகிறது. மேலும் மாம்பழ கூழில் அதிக அளவில் நார்ச்சத்து, வைட்டமின் "சி" மற்றும் பலவகையான பாலிபீனால்கள் காணப்படுகிறது. பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் காப்பர் போன்ற கனிமங்களும் இதில் மிகுந்து காணப்படுகிறது.

மாம்பழத்தின் நன்மைகள்:
1. கொலஸ்டிராலை குறைத்தல்
மாம்பழத்தில் நார்ச்சத்து, பெக்டின் மற்றும் வைட்டமின் சி  அதிக அளவில் உள்ளதால் இரத்தத்தில் உள்ள கெட்ட  கொழுப்பினை (LDL - Low density lipoprotein) குறைக்க உதவுகிறது.
 2. புற்று நோயினை தடுத்தல்
மாம்பழத்தில் உள்ள நோய் எதிர்ப்பூக்கிகள் (antioxidants) மார்பக புற்றுநோய், பெருங்குடல் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோயினை தடுக்கிறது என சமீபத்திய ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளது.
3. முகப்பருவினை நீக்குதல்
மாம்பழம் சாப்பிடுவதால் தோலில் உள்ள அடைக்கப்பட்ட துவாரங்களை சரிசெய்வதால் முகத்தில் உள்ள பருக்கள் மறைகிறது. மேலும் மாம்பழ கூழினை முகத்தில் பூசி சுமார் 10 நிமிடம் கழித்து  முகத்தை கழுவுவதன் மூலம்  முகப்பருக்கள் விரைவாக மறைகிறது.
4. கண் ஆரோக்கியம்
கண் பார்வைக்கு மிக முக்கியமான வைட்டமின்- உற்பத்திக்கு காரணமான பீட்டா கரோட்டின், ஆல்பா கரோட்டின்  மற்றும் பீட்டா கிரிப்டோசாந்தின் போன்ற கரோட்டினாய்டுகள் மாம்பழத்தில் மிக அதிக அளவில் காணப்படுவதால் கண்பார்வை குறைபாடு நோயினை வராமல் தடுக்கிறது. மேலும் மாம்பழத்தில் உள்ள மற்ற கரோட்டினாய்டுகளான சியாசாந்தின் மற்றும் லூட்டின் கண்ணின் கரு விழியினை  பாதுகாக்க உதவுகிறது.
5. நீரிழிவு நோயினை தடுத்தல்
மாம்பழம் மற்றும் அதன் இலைகள் நீரிழிவு நோயினை தடுக்க உதவுகிறது. ஒரு மாம்பழத்தில் சுமார் 31 கிராம் இயற்கையான இனிப்புச்சத்து உள்ளது. ஆனாலும் இதில் கிளைசிமிக் அளவானது குறைவாக இருப்பதினால் இரத்தில் உள்ள சர்கரையின் அளவை உயர்த்துவதில்லை என ஆராய்ச்சி முடிவுகள் கூறுகிறது. எனவே நீரிழிவு நோயாளிகள் மாம்பழத்தினை பயப்படாமல் உண்டு மகிழலாம்.
6. பாலுணர்ச்சியைத் தூண்டுதல்
மாம்பழங்களில் அதிகளவு வைட்டமின்ஈ” உள்ளதால் பாலின  சுரப்பு நீரை (Sex hormone) கட்டுப்படுத்தி பாலுறுப்புகளில் உணர்ச்சியை தூண்டுகிறது. மேலும் லிபிடோ எனப்படும் பாலுணர்வு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
7. செரிமானம்
மாம்பழத்தில் உள்ள செரிமான நொதிகள் மற்றும் நார் சத்து இயல்பான முறையில் புரதங்களை உடைத்து செரிமானம் நடக்கவும் அமிலங்களை நீக்கவும் உதவுகிறது.
8. உயர் இரத்த அழுத்ததினை தடுத்தல்
மாம்பழத்தில் பொட்டாசியம் (148 மில்லி கிராமில் 4 %) அதிக அளவில் உள்ளதால், இது இதய துடிப்பு  மற்றும் இரத்த அழுத்தத்தினை கட்டுப்படுத்த உதவுகிறது.
 9. நோய் எதிர்ப்பு திறனை அதிகரித்தல்
மாம்பழத்தில் வைட்டமின் பி6, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் மிகுந்துள்ளதால் மனிதனுக்கு நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்க செய்கிறது.
பல நன்மைகள் உள்ள முக்கனியில் முதல் கனியான மாம்பழத்தினை நாமும் உண்டு மகிழ்ந்து, ஆரோக்கியமான உடல் நலத்தோடு வாழ்வோமே!

குறிப்பு: இக்கட்டுரையை கலைக்கதிர் அறிவியல் இதழின் ஜீலை-2013 பதிப்பில் வெளியிட்டுள்ளேன். இணைய நண்பர்களும் படித்து தெரிந்துகொள்வதற்காக இங்கே வெளியிடுகிறேன்.

3 comments:

நிலக்கடலையும் அதன் பயன்களும்

முனைவர் க. அசோக்குமார் உதவிப் பேராசிரியர் வேளாண் துறை, பிரிஸ்ட் பல்கலைக்கழகம், வல்லம், தஞ்சாவூர், 613 403. அறிமுகம்: நிலக்...