Wednesday, September 14, 2011

மனிதனும் உலக வெப்பமயமாதலும்


காடுகளை அழித்து
கட்டடங்களை கட்டியதினால்
பருவமழை பொய்த்து போனது
விவசாய விளை நிலங்களை
வீட்டு மனைகளாக உருமாற்றினோம்.

இயற்கை விவசாயத்தை முழுவதுமாக அழித்து
செயற்கை விவசாயத்தில்
உரம், பூச்சிக்கொள்ளி மருந்துகளை தெளித்து
மண்ணையும் மலடாக்கினோம்.

பண்டிகை காலங்களில் பட்டாசு வெடித்து
சுற்றுச் சூழலை மாசுபடுத்தினோம்
கடவுள் சிலைகளை கடலில் கரைத்து
கடலையும் மாசுபடுத்தினோம்.

எரிபொருட்களின் அதிகபட்ச பயன்பாட்டினால்
காற்றினை மாசுபடுத்தி
வளிமண்டலத்தை வெப்பமடைய செய்தோம்
ஓசோனில் ஓட்டையை போட்டோம்
பனிமலைகளை உருகச்செய்தோம்
உலக வெப்பமயமாதலுக்கு நாமே  காரணமானோம்.

மரங்களை நட்டோமா?
பாலீதீன் பைகளை தவிர்த்தோமா?
மின்சாரம்,எரிபொருளின் உபயோகத்தை குறைத்தோமா?
பின், உலகம் வெப்பமயமாகமல் இருக்குமா?

Sunday, September 11, 2011

ஒயினும் அதன் வகைகளும்


அறிமுகம்:
ஒயின் அருந்துவது பண்டைய காலத்திலிருந்து வழக்கத்தில் உள்ளது. இன்றைய சூழ்நிலையில் ஒயின் குடிப்பது மக்களிடையே மிக சாதாரணமாக உள்ளது.  பெருநகரங்களில் வாழும் பெரும்பாலான பெண்களும் தற்போது ஒயின் அருந்துகின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை. மேலும் ஒயின் குடிப்பதால் தோலின் நிறம் கூடும், தோல் மென்மையாக மாறும், மற்றும் உடலுக்கு நல்லது என்று கூறி பல நபர்கள் ஒயின் அருந்துவதை நாம் பார்த்திருப்போம். பொதுவாக மென்மது (பீர்) ஆனது 4 முதல் 5 சதவிகித ஆல்கஹாலை கொண்டிருக்கும். இந்தியாவில் தயாராகும் ஒயின்கள் பொதுவாக 0.5 சதவிகிதத்திற்கும் குறைவான (<0.5%)  ஆல்கஹால் இருப்பதால் குடிப்பவர்களுக்கு போதை ஏறுவதில்லை. ஆனாலும் சில வகை ஒயின்களில்   15 சதவிகித்திற்கும் அதிகமாக ஆல்கஹால் உள்ளது. இத்தகைய ஒயின்கள் அதிக போதையை தரவல்லது. தற்போது ஒயின் உற்பத்தியில் பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் மற்றும் அமெரிக்கா முறையே முதல் நான்கு இடங்களை பிடித்துள்ளது.

ஒயின் என்றால் என்ன?
ஒயின் என்பது பல்வேறு வகையான ஈஸ்டுகளை பயன்படுத்தி திராட்சை பழச்சாறினை நொதிக்க வைத்து (Fermentation) பெறப்படும் பானமே ஆகும். பல்வேறு வகையான திராட்சை பழ இரங்களை ஒயின் தயாரிப்பதில் பயன்படுத்துவதால் பல பெயர்களில் ஒயின் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது ஆப்பில், பெர்ரி, பார்லி போன்றவற்றிலிருந்தும் ஒயின் தயாரிக்கின்றனர்.

ஒயின் வகைகள்-(Types of Wine)
திராட்சை பழங்களிலிருந்து மட்டும் தயாரிக்கப்படும் ஒயினின் வகைகளை இங்கு காண்போம்.

1.வெள்ளை ஒயின் (White wine)‍‍
வெள்ளை நிற திராட்சையிலிருந்து (அதாவது பச்சை திராட்சை) பெறப்படும் ஒயின். இந்த வகை திராட்சையானது ஆஸ்திரியா, பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. சார்டன்னே, ஷென்பிளாங்க், பினாட் கிரிஸ், ரெஸ்லிங் மற்றும் செமிலான் போன்ற திராட்சை இரகங்கள் அதிக அளவில் வெள்ளை ஒயின் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.

2.சிவப்பு ஒயின் (Red wine): 
கருப்பு (அ) சிவப்பு நிற திராட்சையிலிருந்து  பெறப்படும் ஒயின். இந்த வகை  திராட்சையானது அமெரிக்கா, அர்ஜென்டினா, ஆஸ்திரியா, சிலி, இத்தாலி, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகளில் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. பார்பெரா, டோல்செட்டோ, கேமி, மால்பெக் மற்றும் பினாட் நோய்ர் போன்ற திராட்சை இரகங்கள் அதிக அளவில் சிவப்பு ஒயின் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.

3.இளஞ்சிவப்பு ஒயின் (Rose wine):
கருப்பு (அ) சிவப்பு நிற திராட்சையின் தோலை நீக்கிய பின் பெறப்படும் ஒயின். இந்த ஒயினை சிவப்பு ஒயினிலிருந்தும் தனியே பிரித்தெடுக்கலாம். இந்தவகை ஒயின் சிலவருடங்களுக்கு முன்பிருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.

4.ஜொலிக்கும் (அ) வெற்றி ஒயின் (Sparkling wine):
பல்வேறு வகையான திராட்சை இரகங்களிலிருந்து பல்வேறு முறைகளின் மூலமாக ஜொலிக்கும் ஒயின் தயாரிக்கப்படுகிறது. இந்த ஒயினை தான் விளையாட்டு வீரர்கள் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற சந்தோசத்தை கொண்டாடும் விதமாக ஒயினை நன்கு குலுக்கி நுரையோடு பீச்சிட்டு அடிப்பார்கள். இந்த ஒயினில் சிறிது வெற்றிடத்துடன் குறிப்பிட்ட அளவு கார்பன்டை ஆக்சைடு வாயு இருப்பதால் குலுக்கும் போது பாட்டிலினுள் ஏற்படும் அழுத்தத்தால்(pressure) மூடியை திறந்தவுடன் ஒயின் மிக வேகமாக நுரையுடன் வெளியேறுகிறது. இந்த ஒயினுக்கு உதாரணமாக உலக அளவில் தெரிந்த ஷாம்பெயின் (Champagne) னை கூறலாம்.

5.இனிப்பு ஒயின் (Dessert wine): 
இனிப்பு ஒயினானது திராட்சை வளரும் இடம், தயாரிக்கும் முறை போன்றவற்றை சார்ந்தது. இவ்வகை ஒயினில் இயற்கையான குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸ் இருக்கும். கனடா மற்றும் ஜெர்மனியில்  இனிப்பு ஒயின் வகையை சார்ந்த பனி ஒயின் (அ) ஐஸ் ஒயின் உலகில் மிகவும் பிரபலமானதாகும். கனடாவில் உற்பத்தி செய்யப்படும் ஐஸ் ஒயினில் 75 சதவிகிதம் ஓன்டாரியோ (Ontario) மாகானத்தை சேர்ந்தது.




6.வலுவூட்டப்பட்ட ஒயின் (Fortified wine): 
வலுவூட்டப்பட்ட ஒயினானது மற்ற ஒயின்களை அதிக அளவில் ஆல்கஹாலை கொண்டிருக்கும்.இதற்கு காரணம் இந்த வகை ஒயின் தனிப்பட்ட முறையில் வடிகட்டி பெறப்படுகிறது. வலுவூட்டப்பட்ட ஒயின் ஐரோப்பிய நாடுகளில் மிகவும் பிரபலமடைந்துள்ளது.

நன்மைகள்:
சிவப்பு ஒயினில் உள்ள பாலிபீனாலினால் இது இருதய நோய்க்கு பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. மேலும் சிவப்பு ஒயினை ஆண்கள் மிதமான அளவில் அருந்தினால் நுரையீரல் புற்றுநோய் ஆபத்தை குறைக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

குறிப்பு: நண்பர்களே, இந்த பதிவின் மூலம் உங்களை மது அருந்த சொல்லவில்லை. மதுவும் ஒரு அறிவியலே ஆதலால் ஒயினைப் பற்றி தெரிந்து கொள்வதற்காகவே இந்த பதிவு. நன்றி.

Monday, September 5, 2011

வேளாண் உயிரி தொழில்நுட்பவியல் - (Agricultural Biotechnology)


அறிமுகம்:
சுமார் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே விவசாயிகள் காட்டு  தாவரங்களை (Wild Plants) தேர்வு (Selection) செய்து குறிப்பிட்ட பண்புகளுக்கு இனப்பெருக்கம் செய்து பயிரினை மேம்படுத்தி பயிரிட்டு வந்தனர். இந்த இனப்பெருக்கம் மூலம் பெறப்பட்ட பல்வேறு தாவர மற்றும் விலங்கினங்கள் இன்று நம்மால் பொதுவாக வளர்க்கப்பட்டு வருகிறது. இருபதாம் நூற்றாண்டில் தாவர இனப்பெருக்கம் (Plant Breeding) மூலமாக அதிகரிக்கப்பட்ட விளைச்சல், நோய் மற்றும் பூச்சிகளுக்கு எதிர்ப்பு திறன், வறட்சி எதிர்ப்பு திறன் மற்றும் மேம்படுத்தப்பட்ட சுவை போன்ற பல்வேறு பண்புகளுக்கு பயிர் இரகங்கள் (Varieties) மற்றும் வீரிய ஒட்டு இரகங்கள் (Hybrids) உருவாக்கப்பட்டுள்ளது. இத்தகைய பயிர் இரகங்களில் குறிப்பிட்ட பண்பிற்கான (Specific character) மரபணு (டி என் ஏ) ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுகிறது. இதனை பயிர் இரகங்களின் புறத்தோற்ற  வேறுபாடுகள் மூலம் நம் கண்ணால் பார்த்தே உறுதி செய்ய முடியும். ஆனால் பயிரில் புறத்தோற்ற வித்தியாசங்களை கண்ணால் கண்டறிய முடியாத பண்புகளை தற்போது  மூலக்கூறு குறியீடு (Molecualr Marker) தொழில் நுட்பத்தை பயன்படுத்தி குறிப்பிட்ட பண்பிற்கான மரபணு பயிரில் உள்ளதா? அத்தகைய குறிப்பிட்ட  மரபணுவின் அமைவிடம் தாவரத்தில்  எந்த குரோமோசோமில் உள்ளது என கண்டறியவும் மேலும் அந்த மரபணுவின்  அளவு (Gene size) என்ன? என்பதையும் கண்டறிய முடியும். உதாரணம்: நெல் பயிரானது எதிர்பாராத மழையினால் வெள்ள நீரில் (Flooding)   மூழ்கி உள்ள போது அழுகி இறக்காமல் இருக்க சப்1 (Sub1) என்ற மரபணுவே காரணம் எனவும், இந்த மரபணு நெல்லில் 9 வது குரோமோசோமில் அமைந்துள்ளது எனவும் ஆராய்சிகளில் கண்டறியப்பட்டுள்ளது.  உயிரி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பூச்சி மற்றும் நோய் (குறிப்பாக வைரஸ்), களைச் செடிகளுக்கு எதிர்ப்பு திறனுடைய மற்றும் அதிகரித்த ஊட்டச் சத்துகள், பழங்களை அதிக நாட்களுக்கு கெடாமல் சேமித்து  வைக்கும் திறன் போன்ற பல்வேறு வகைகளில் மரபணு மாற்றிய பயிர்கள் (Genetically Modified Crops) உருவாக்கப்படுகிறது.

வேளாண் உயிரி தொழில்நுட்பவியல் என்றால் என்ன? 
வேளாண் உயிரி தொழில்நுட்பம் என்பது பல்வேறு அறிவியல் தொழில் நுட்பங்களை பயன்படுத்தி தாவரங்கள், விலங்குகள் மற்றும் நுண்ணுயிர்களை மேம்படுத்துதலே ஆகும். இத்தகைய உயிரி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குறிப்பிட்ட பயிரில் குறிப்பிட்ட பண்பிற்கான மரபணுக்களை கண்டறியவும், அந்த குறிப்பிட்ட பண்பிற்கான மரபணுவின் செயல்பாடுகளை கண்டறிய முடியும். மரபணுக்களின் செயல்பாடுகளை கண்டறிந்து விவசாய உற்பத்தியை  அதிகரிப்பதன் மூலமாக அதிகரித்து வரும் மக்கள் தொகை பெருக்கத்தினால் மக்களின் உணவுத்தேவையை பூர்த்தி செய்வதற்கு உயிரி தொழில்நுட்பமே தீர்வாக விளங்குகிறது. மேலும், பாரம்பரிய கலப்பு (Traditional Crosssing) சாத்தியமல்லாத தாவர இனங்களை மேம்படுத்துதலில் உயிரி  தொழில்நுட்பம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

வேளாண்மையில் உயிரி தொழில்நுட்பவியல் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது?

1.மூலக்கூறு குறியீடுகள் (Molecular Markers):
பாரம்பரிய இனப்பெருக்கத்தில்  புலப்படும் அல்லது அளவிடக்கூடிய பண்புகளை (Visible or Measurable traits) அடிப்படையாக வைத்து தனிப்பட்ட தாவரங்கள் அல்லது விலங்குகள் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆனால் மூலக்கூறு சார்ந்த இனப்பெருக்கத்தில் கண்ணுக்கு புலப்படாத பண்புகளை மூலக்கூறு குறிப்பான்களை பயன்படுத்தி விரும்பத்தக்க மரபணுவானது குறிப்பிட்ட தாவரங்கள் அல்லது விலங்குகளில் உள்ளதா அல்லது இல்லையா என மரபணுவை  சோதித்து கண்டறிந்து தனிப்பட்டதாவரங்கள் அல்லது விலங்குகள் தேர்ந்தெடுக்கப்படுகிறது. எனவே, இந்த இனப்பெருக்க முறையில் தாவரங்கள் மிகவும் துல்லியமாக  தேர்ந்தெடுக்கப்படுகிறது. உதாரணமாக, குறிப்பிட்ட நெல் பயிரில் வறட்சிக்கு காரணமான மரபணு உள்ளதா அல்லது இல்லையா என்பதினை மூலக்கூறு குறிப்பான்கள் (அ) மூலக்கூறு குறியீடுகளை பயன்படுத்துவதன்  மூலம் கண்டறிய முடியும். மூலக்கூறு குறியீடு சார்ந்த தேர்வு (Marker Assisted Selection) முறையினை  பயன்படுத்தி  பயிர் இனப்பெருக்கத்தில் குறுகிய காலத்தில் சூழ்நிலைக்கு தகுந்த பயிர் இரகங்களை வெளியிட முடிகிறது. உதாரணமாக, வெள்ள நீரில் (Flooding)   நெற்பயிர் மூழ்கும் போது அழுகி இறக்காமல் இருக்க பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள சர்வதேச நெல் ஆராய்ச்சி மையத்தினால் (International Rice Research Institute-IRRI) சில ஆண்டுகளுக்கு முன்பு சொர்ணா - சப்1 (Swarna - Sub1) என்ற நெல் இரகம் வெற்றிகரமாக வெளியிடப்பட்டு சர்வதேச அளவில் பயிரிடப்படுகிறது.

2.மரபணு பொறியியல் (Genetic Engineering):
மரபணு மாற்றும்  நுட்பங்களை பயன்படுத்தி, ஒரு உயிரினத்திலிருந்து குறிப்பிட்ட பண்பிற்கான மரபணுக்களை  வேறொரு  உயிரினத்தினுள் உட்செலுத்துவதே மரபுப்பொறியியல் (அ) மரபணு பொறியியல்(Genetic Engineering-GE) எனப்படுகிறது. இந்த மரபணு பொறியியலானது மரபணு மாற்றம் (Genetic Modification-GM) மற்றும் மரபணு முன்னேற்றம் (அ)  மரபணு மேம்பாடு (Genetic Improvement-GI) என்றும் அழைக்கப்படுகிறது. உதாரணத்திற்கு, நோய் எதிர்ப்பு திறனுள்ள மரபணுவை வேறொரு உயிரினத்திலிருந்து குறிப்பிட்ட தாவரத்தினுள் உட்செலுத்துவதால் அத்தாவரம் குறிப்பிட்ட நோயிற்கு எதிர்ப்பு திறன் கொண்டு பயிரின் சேதம் குறைந்து, மகசூல் அதிகரிக்க மிக முக்கிய காரணமாக அமைகிறது. இதைப்போன்றே மரபணு பொறியியலை பயன்படுத்தி தாவரத்தில் பூச்சி மற்றும் நோய் எதிர்ப்பு திறன், களைச் செடிகளுக்கு எதிர்ப்பு திறன்,  அதிகரித்த ஊட்டச் சத்துகள், பழங்களை அதிக மற்றும் நாட்களுக்கு கெடாமல் சேமித்து  வைக்கும் திறன் படைத்த மரபணு  மாற்றிய  பயிர்களை உருவாக்கி பயன்பெறலாம். உதாரணங்கள்: காய்ப்புழுவிற்கு எதிர்ப்பு திறனுள்ள பி.டி பருத்தி, களைக்கொல்லிகளுக்கு எதிர்ப்பு திறனுள்ள பி.டி மக்காச்சோளம், பி.டி சோயாபீன்ஸ் மற்றும் பி.டி கடுகு (கனோலா), பப்பாளி ரிங் ஸ்பாட் வைரஸ் (Papaya Ring Spot Virus)  நோயிற்கு எதிர்ப்பு திறனுள்ள பப்பாளி மற்றும் 2013ஆம் ஆண்டு வெளிவர உள்ள வைட்டமின் ஏ அதிகமுள்ள தங்க நெல் (Golden Rice). மேலும், வாழையில் முடிக்கொத்து வைரஸ் நோயிற்கு எதிர்ப்புதிறனுடைய (Banana Bunchy Top Virus Resistant) வாழையை உருவாக்குதல் போன்ற பல பல்வேறு பயிர்களில் வைரஸ் நோய் எதிர்ப்பு திறனுள்ள பயிர்களை உருவாக்க ஆராய்ச்சிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இவ்வாறு வைரஸ் நோயிற்கு எதிர்ப்பு திறனுடைய பயிர்களை உருவாக்குவதன் மூலம் பயிர்களின் விளைச்சலில் ஏற்படும் சேதாரம் குறைந்து மகசூல் அதிகரிக்கப்படுவதுடன் நோய் பரவுதலும் தடுக்கப்படுகிறது.

3.மூலக்கூறு பரிசோதனை (Molecular Diagnostic)
மூலக்கூறு பரிசோதனை முறையினை பயன்படுத்தி துல்லியமாக குறிப்பிட்ட நோயிற்கு காரணமான மரபணுவை கண்டறிய முடியும்.  உதாரணத்திற்கு, வேளாண்மையில் பயிர்/கால்நடைகளில் ஏற்படும் நோய்களை மூலக்கூறு பரிசோதனை மூலமாக கண்டறிதல்.

4.திசு வளர்ப்பு (Tissue Culture)
தாவரத்தின் பாகங்களிலிருந்து குறிப்பிட்ட சிறு பகுதியினை வெட்டியெடுத்து திசு வளர்ப்பு முறைகளை பயன்படுத்தி மீளுருவாக்கமடைந்து (Regeneration) கிடைக்கும் புதிய தாவரங்களை/செடிகளை உற்பத்தி செய்து பயிரிடப் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு திசு வளர்ப்பு முறையின் மூலமாக பெறப்படும் தாவரங்கள் நோய் தாக்குதலின்றி உள்ளது. திசு வளர்ப்பு முறையினால் உற்பத்தி செய்யப்படும் சில தோட்டகலை பயிர்களுக்கான எடுத்துகாட்டுகள்: வாழை, எலுமிச்சை, அன்னாசி(பைனாப்பிள்), பப்பாளி, காஃபி மற்றும் மூங்கில்(முள் இல்லாதது).  திசு வளர்ப்பு முறையின் மூலம் பயிர்களை உற்பத்தி செய்வது தொடர்பான ஆராய்ச்சிகள் தற்போது பல்வேறு பயிர்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


http://www.dinamani.com/edition/BlogStory.aspx? &SectionName=BlogNews&artid=487693&SectionID=184&MainSectionID=184&Title=%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+-+%28Agricultural+Biotechnology%29

Thursday, September 1, 2011

உயிரி தொழில்நுட்பவியல் - ஓர் அறிமுகம் (Introduction to Biotechnology)


அறிமுகம்
கிமு. 3000-4000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, பண்டைய மெசபடோமியன்கள்  முளைத்த தானியங்களை உலரவைத்து (மால்டிங் மூலமாக‌) மென் மது (Beer) போன்ற பானங்கள் உற்பத்தி செய்து பயன்படுத்தி உள்ளனர். மேலும் பண்டைய எகிப்தியர்களால் திராட்சை சாறிலிந்து ஒயின் தயாரித்து உள்ளனர். இதுவே உயிரி தொழில்நுட்பத்தின் ஆரம்ப நிலையாகும்.

பயோடெக்னாலஜி  (உயிரி தொழில்நுட்பம்) என்ற சொல்  1917 ஆம் ஆண்டில் கார்ல் எரிக்கி (Karl Ereky) என்ற ஹங்கேரிய விஞ்ஞானியால்  பெயரிடப்பட்டது. 21ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மக்களின் சுகாதாரம் சார்ந்த பிரச்சினைகள் உலகம் எதிர்நோக்கியிருந்த பெரும் சவாலாக இருந்தது. இந்த காலகட்டத்தில் உயிரி தொழில்நுட்ப முறைகளை மருத்துவத் துறையில் பின்பற்றி, நோய் தடுப்பு மருந்துகள் (Vaccines) தயாரிக்க தொடங்கிய பின்னரே, உயிரி தொழில்நுட்பவியல் மிகவும் சக்தி வாய்ந்ததாக மாறியது. இத்தொழில் நுட்பம் மூலமாக‌, வேளாண்மை, மருத்துவம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட துறைகளில் புதிய புரட்சியை ஏற்படுத்த முடியும் என்ற நிலை உருவானது.

பெருகிவரும் மக்கள் தொகை பெருக்கத்தினால் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதில் உயிரி தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கும் என அறிவியல் அறிஞர்களால் கணிக்கப்பட்டுள்ளது. இத்தகைய தொழில் நுட்பத்தை வேளாண்மையில் பயன்படுத்துவதினால் பூச்சி மற்றும் நோய் எதிர்ப்பு திறனுள்ள மரபணு மாற்றிய‌ பயிர் இரகங்களை உருவாக்கி பயிரின் மகசூலை அதிகரிப்பதுடன் பூச்சி மற்றும் நோய் கொல்லி மருந்துகளை பயிர்களுக்கு தெளிப்பதை தவிர்த்து மண் வளம் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு அடைவதை தவிர்க்க முடியும். உயிரி தொழில் நுட்பமானது வேளாண்மையில் மட்டுமின்றி கால்நடை அறிவியல் வளர்ச்சியிலும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

உயிரி தொழில்நுட்பவியல்  (பயோடெக்னாலஜி) என்றால் என்ன?
உயிரியல் தொழில் நுட்ப முறைகளை பயன்படுத்தி மனிதனின் வாழ்விற்கு அதிக பட்ச நன்மைகளை பெறுவதே உயிரி தொழில்நுட்பவியல் ஆகும். மேலும், இந்த உயிரி தொழில்நுட்பவியலானது உயிரியலில், பயன்பாட்டு அறிவியலாக (Applied science) விளங்குகிறது.

உயிரி தொழில்நுட்பவியலின் பிரிவுகள் (Branches of Biotechnology):
உயிரி தொழில்நுட்பவியலானது நிறங்களின் அடிப்படையில் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன,

1. மருத்துவ உயிரி தொழில்நுட்பவியல் - (Medical or Red biotechnology)
உயிரி தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மனிதனின் நோய்களை குணப்படுத்தும் (அ) கட்டுப்படுத்தும் மருந்துப் பொருள்களை தயாரித்தலே மருத்துவ உயிரி தொழில்நுட்பவியல் ஆகும். உ.தா: நீரிழிவு நோயை (டயபடிஸ்) கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும் இன்சுலின், இரத்தம் உறைதலுக்கு காரணமான ஃபேக்டர் VIII மற்றும் VII (Factor VIII and VII),  நுண்ணுயிர் கொல்லிகள் (Antibiotics), நோய் எதிர்ப்பு திறனுள்ள தடுப்பூசி மருந்துகள் (Vaccines) போன்று நிறைய மருந்து பொருள்கள் உள்ளன. இத்தகைய மருத்துவ  உயிரி தொழில் நுட்பவியலானது நிறத்தின் அடிப்படையில் சிவப்பு உயிரி தொழில்நுட்பவியல் (Red biotechnology) என்றும் அழைக்கப்படுகிறது.

2. வேளாண் உயிரி தொழில்நுட்பவியல் - (Agricultural or Green Biotechnology)
உயிரி தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வேளாண்மையில் மகசூலை அதிகரிப்பதே முக்கிய குறிக்கோள் ஆகும். எடுத்துகாட்டாக‌ மரபணு மாற்றிய பயிர்களை பயிரிடுவதன் மூலம் பயிரின் விளைச்சலின் சேதாரம் குறைக்கப்படுகிறது. மேலும் இதனால் பூச்சி கொல்லிகள் தெளிப்பதை தவிர்த்து சுற்றுப் புற சூழலும் பாதுகாக்கப்படுகிறது (உ.தா: காய்ப்புழுவிற்கு எதிர்ப்பு திறனுள்ள பி.டி. பருத்தி). இதைப் போன்று,   அதிகரித்த ஊட்டச் சத்துகள், நோய் எதிர்ப்பு திறன், களைச் செடிகளுக்கு எதிர்ப்பு திறன், பழங்களை அதிக  நாட்களுக்கு கெடாமல் சேமித்து  வைக்கும் திறன் படைத்த மரபணு  மாற்றிய  பயிர்கள் உயிரி தொழில் நுட்பத்தால் உருவாக்கப்பட்டு பயிரிடப்படுகிறது. இத்தகைய வேளாண் உயிரி தொழில்நுட்பமானது பசுமை  உயிரி தொழில்நுட்பம் (Green biotechnology) என்றும் அழைக்கப்படுகிறது.

3. தொழிலிய உயிரிதொழில்நுட்பவியல் - (Industrial or White Biotechnology)
தொழில்சாலையில் உயிரி தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதினால் தொழில்துறை பொருட்கள் உற்பத்தி செலவு குறைவதில் தொழிலிய உயிரிதொழில்நுட்பவியல் முக்கிய பங்கு வகிக்கிறது. தொழிலிய உயிரிதொழில்நுட்பவியல் மூலமாக  வேதிப்பொருள் மற்றும் உயிர் ஆற்றலை (Bioenergy) உற்பத்தி செய்ய முடியும். இரசாயனங்கள், மருந்துப்பொருட்கள் (Pharmaceuticals), உயிரி நிறமேற்றி (Bio-colorants), கரைப்பான்கள் (Solvents), வைட்டமின்கள், உணவு சேர்க்கைகள் (Food additives), உயிரி எரிபொருள் (Bio-fuel), உயிரி பூச்சிகொல்லிகள் (Bio-pesticides) மற்றும் உயிரி பிளாஸ்டிக்குகள் (Bio-plastics), போன்ற பல்வேறு பொருள்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.

4. கடல்சார் உயிரி தொழில் நுட்பவியல் - (Marine or Blue Biotechnology)
உயிரி தொழில்நுட்பங்களை  கடலில் வாழும் உயிரினங்களில் பயன்படுத்தி உணவு, வாசனை மற்றும் மருந்துப் பொருள் தயாரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.  கடல் வாழ் உயிரினங்களிலிருந்து புற்று நோயிற்கு (கேன்சர்) மருந்து பொருள் கண்டுபிடித்தல் போன்ற ஆராய்ச்சியின் காரணமாக தற்போது இத்துறை பிரபலமடைந்து வருகிறது. இத்துறை நீல உயிரி தொழில்நுட்பவியல் (Blue Biotechnology) என்றும் அழைக்கப்படுகிறது.

உயிரி தொழில்நுட்பவியலின் தற்போதைய மற்றும் வருங்காலம் எப்படி இருக்கும்?

அறிவியல் வளர்ச்சியில் எப்போதுமே புதியதாக ஒரு தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் போது ஆரம்பகாலத்தில் எதிர்ப்புகள் வருவது சாதாரணம். பின்பு,  அதன் அவசியத்தை உணர்ந்து நாம் பின்பற்ற தொடங்குவோம். உயிரி தொழில்நுட்பமானது இன்றைய காலகட்டத்தில் தற்போதைய தொழில்நுட்பம் (Current technology) என்றழைத்தால் மிகையாகது. ஏனெனில் தற்போதைய ஆராய்சிகளில் உயிர் தொழில் நுட்பம் சார்ந்த ஆய்வுகளே முன்னிலை பெறுகிறது. மேலும் இத்துறை சமீப காலமாக மிக வேகமான வளர்ச்சி பெற்று வருகிறது.  ஆனால் தற்போது இந்திய மக்களிடையே மரபணு மாற்றிய பயிர்கள் (GM crops) பற்றிய அறிவியல் ஆதாரமற்ற அச்சம் நிலவுகிறது. அறிவியல் பயின்றவர்கள் உயிரி தொழில் நுட்பம் என்றால் என்ன? அது எவ்வாறு செயல்படுகிறது என்பதினை மக்களிடையே எடுத்துரைத்து தேவையில்லாத பயத்தினை போக்குவது நீக்குவது அவசியமான ஒன்றாகும்.
அமெரிக்க கண்டத்தில் மிக பரவலாக உள்ள மரபணு தொழில்நுட்பம் ஆசிய கண்டத்தில் தற்போது பிரபலமடைந்து வருகிறது.  அதிகரித்து வரும் மக்கள் தொகைபெருக்கம், சுருங்கி வரும் வேளாண் நிலப் பரப்புகளால் மக்களின் எதிர்கால உணவு தேவையை பூர்த்தி செய்வதில் இத்துறையே தீர்வாக அமையும் என்றால் அது மிகையாகாது. இன்னும் சுமார் இருபது ஆண்டுகளுக்கு மேல் இத்துறையின் வளர்ச்சியில் சரிவு ஏற்படாது என்பதே உண்மையாகும்.

உயிரி தொழில்நுட்பம் பட்ட படிப்பு படிக்கலாமா?
தற்போது உள்ள சூழ்நிலையில் உயிரி தொழில்நுட்பத்தை தாராலமாக படிக்கலாம். ஏனெனில், தற்போது தகவல் தொழில்நுட்ப துறைக்கு போட்டியாக உயிரி தொழில்நுட்ப துறை விளங்குகிறது. மேலும் இத்துறையில் முது நிலை மற்றும் முனைவர் பட்ட ஆராய்ச்சி படிப்பினை  நல்ல கல்லூரியில் படித்து, திறமையுடன் இருந்தால் இந்தியாவில் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் ஆராய்ச்சி சம்மந்தப்பட்ட பணியினை சுலபமாக பெறலாம். ஏனெனில், இன்றைய காலகட்டத்தில், உயிரியலுடன் தொடர்புடைய‌ எந்த துறையின் ஆராய்ச்சியாக இருந்தாலும் அதில் சிறிதளவாவது உயிரி தொழில்நுட்பத்தை சார்ந்தே உள்ளது என்பதினை மறுக்க இயலாது.


குறிப்பு 1: உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சியாளரான நான் என்னால் முடிந்த அளவு உங்களுக்கு புரியும்  வகையில் தமிழ் மொழியில் இந்த கட்டுரையினை எழுதியதில் மகிழ்ச்சியடைகிறேன்.

குறிப்பு 2: இந்த கட்டுரையை  மே-2013 கலைக்கதிர் அறிவியல் மாத இதழில் வெளியிட்டுள்ளேன்.

நிலக்கடலையும் அதன் பயன்களும்

முனைவர் க. அசோக்குமார் உதவிப் பேராசிரியர் வேளாண் துறை, பிரிஸ்ட் பல்கலைக்கழகம், வல்லம், தஞ்சாவூர், 613 403. அறிமுகம்: நிலக்...