Showing posts with label அறிவியல் செய்திகள். Show all posts
Showing posts with label அறிவியல் செய்திகள். Show all posts

Saturday, September 21, 2013

முந்திரி பருப்பின் முத்தான நன்மைகள்


அறிமுகம்

தாவரவியல்படி முந்திரியின்  பேரினம் அனகார்டியம், ஆகும். இதன் அறிவியல் பெயர் அனகார்டியம் ஆக்ஸிடென்டேல்  மற்றும் அனகார்டியேசியே குடும்பத்தை சேர்ந்ததாகும். இது மர வகையை சார்ந்த  பணப்பயிராக உள்ளது. முந்திரியின் தோற்றம் பிரேசில் ஆகும். இதனை உலகம் முழுவதும் பரவச்செய்தது போர்த்துகீசியர்கள். தற்போது பிரேசில், வியட்னாம், இந்தியா மற்றும் பல ஆப்பிரிக்க நாடுகளில் வணிகரீதியாக முந்திரி பயிரிடப்படுகிறது.  முந்திரி பயிரிட்டால் மந்திரி ஆகலாம் என்பது கிராமத்தில் வழக்கத்தில் உள்ளது. அதாவது முந்திரி பயிரிட்டால் கண்டிப்பாக நஷ்டம் வராது என்பதினையே இவ்வாறு கூறியுள்ளனர். தமிழ்நாட்டில் புதுக்கோட்டை, விழுப்புரம், கடலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் அதிக அளவில் முந்திரி பயிரிடப்படுகிறது.
 முந்திரி பருப்பானது உண்பதற்கு சுவையானதோடு மட்டுமில்லாமல் உடலுக்கு தேவையான இரும்பு, காப்பர், செலினியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், மற்றும் துத்தநாகம் (Zinc) போன்ற கனிம தாதுப்பொருள்கள் அதிக அளவில் உள்ளது.  மேலும் தாவர வேதியங்கள் (Phytochemicals)  அல்லது தாவர ஊட்டச்சத்துகள், நோய் எதிர்ப்பூக்கிகள் மற்றும் புரதங்களும் முந்திரி பருப்பில் அதிகமாக உள்ளது. முந்திரி பருப்பின் நன்மைகளை பற்றி கீழே காண்போம்.

முந்திரி பருப்பின் முத்தான நன்மைகள்:

1.முந்திரி பருப்பில் அதிகமாக கலோரி உள்ளது. அதாவது 100 கிராம் முந்திரி பருப்பில் சுமார் 553 கலோரிகள் உள்ளது.  மேலும், முந்திரி பருப்பில்  நார்ச்சத்து, வைட்டமின்கள், கனிம தாதுக்கள் உள்ளதோடு,  நோய்கள் மற்றும் புற்றுநோயினை வராமல்  தடுக்க உதவும் தாவர வேதியங்கள் (அ) பைட்டோகெமிக்கல்ஸ் அதிக அளவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
2. முந்திரி பருப்பில் இதயத்திற்கு நன்மை தரக்கூடிய ஒற்றை நிறைவு பெறாத கொழுப்பு அமிலங்களான (monounsaturated-fatty acids) ஒலியிக் மற்றும் பால்மிட்டோலெயிக் அமிலங்கள் அதிக அளவில் காணப்படுகிறது. இத்தகைய கொழுப்பு அமிலங்கள் உடலுக்கு தீமை விளைவிக்ககூடிய  கொலஸ்டிராலை (low-density lipoprotein cholesterol) குறைத்து நன்மை தரக்கூடிய கொலஸ்டிராலை (high-density lipoprotein cholesterol) அதிரிக்க செய்கிறது.  மேலும் ,  ஒற்றை நிறைவு பெறாத கொழுப்பு அமிலங்கள் கரோனரி இதய நோயினை தடுக்க உதவும் என்று சமீபத்திய ஆராய்ச்சி முடிவுகள் மூலமாக அறியமுடிகிறது.
3.முந்திரி பருப்பில்  மாங்கனீசு, பொட்டாசியம், தாமிரம், இரும்பு, மெக்னீசியம், துத்தநாகம் மற்றும் செலினியம் கனிம தாதுக்கள் அதிக அளவில் உள்ளது. ஒரு நாளைக்கு ஒரு சில முந்திரி பருப்புகளை உணவில் சேர்த்துக்கொண்டாலே  மேற்கூறிய கனிம தாதுக்கள் குறைப்பாட்டினால் வரக்கூடிய நோய்களை தடுக்கலாம். 
4.முந்திரி பருப்பில் உள்ள மெக்னீசியமானது, எலும்பு வலுவடைவதற்கு உதவுகிறது. மெக்னீசியம் குறைபாட்டினால் உயர் இரத்த அழுத்தம், தசை இறுக்கம், ஒற்றை தலைவலி  மற்றும் சோர்வு ஏற்படுகிறது. முந்திரி பருப்பில் அதிகமாக உள்ள செலினியம் ஊட்டச்சத்தானது உடலுக்கு நோயெதிர்ப்பு திறனை தரவல்ல நொதிகளான குளுடாதயோன் பெராக்ஸிடேஸ் நொதிக்கு இணை காரணியாக செயல்படுகிறது.
4. முந்திரி பருப்பில்  காப்பர் அதிக அளவில் உள்ளது. இது பல முக்கியமான நொதிகளுக்கு இணை காரணியாக செயல்படுகிறது, காப்பர், மாங்கனீசு மற்றும் துத்தநாகம் போன்ற தாதுக்களானது சைட்டோகுரோம் சி ஆக்ஸிடேஸ் மற்றும் சூப்பர் ஆக்சைடு டிஸ்முடேஸ்  நொதிகளுக்கு இணை காரணிகளாக உள்ளது. மேலும் காப்பரில் உள்ள தைரோசினேஸ் ஆனது,  தைரோசினை மெலனின் ஆக மாற்றுகிறது. மெலனின் முடி மற்றும் தோலுக்கு நிறம் கொடுக்கும் நிறமி ஆகும்.
5. முந்திரி பருப்பிலுள்ள துத்தநாகம் பல்வேறு நொதிகளுக்கு இணை காரணியாக உள்ளதோடு, வளர்ச்சி,  விந்து உற்பத்தி, செரிமானம் மற்றும் நியூக்ளிக் அமிலம் சிதைவடைதலை ஒழுங்குபடுத்துகிறது.
6. முந்திரி பருப்பில் அத்தியாவசிய வைட்டமின்களான பேண்டோதெனிக் அமிலம் (வைட்டமின் B-5), பைரிடாக்சின் (வைட்டமின் பி-6), ரிபோபிலாவின் மற்றும் தையமின் (வைட்டமின் பி-1) அதிக அளவில் உள்ளன.  100கிராம் முந்திரி பருப்பில் 0.147 மில்லி கிராம் அல்லது   தினசரி பரிந்துரைக்கப்பட்ட  அளவில் 35 சதவீத பைரிடாக்சின் உள்ளது. இத்தகைய வைட்டமின்கள் செல்களில் புரதம், கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது.
7. முந்திரி பருப்பில் குறைந்த அளவிலான சியாசாந்தின் உள்ளது. இது கண்ணில் உள்ள கரு விழி படலத்தை பாதுகாக்க உதவுகிறது.
மேற்கூறிய பல்வேறு பயன்பாடுகள் உடைய முந்திரி பருப்பை நாமும் உணவில் சேர்த்துக்கொண்டு உடல் நலத்தோடு வாழ்வோமே!

குறிப்பு: இக்கட்டுரை கலைக்கதிர் அறிவியல் இதழில் விரைவில் வெளிவர உள்ளது.  இணையதள வாசகர்களும் படித்து தெரிந்துகொள்வதற்காக வலைப்பூவில் வெளியிடுகிறேன். நன்றி.

Friday, November 18, 2011

உலகில் முதன் முதலாக துவரையின் மரபணு வரிசையினை கண்டறிந்த இந்திய வேளாண் விஞ்ஞானிகள்


துவரை அறிமுகம்
இந்தியாவை தாயகமாக கொண்ட துவரை (Red gram or Pigeon pea) பயிரானது, இந்தியா, தென் கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் பயறு வகை பயிர்களில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.  இந்நாடுகளே 85 சதவிகிதத்திற்கும் அதிகமான துவரையினை உற்பத்தி செய்து பயன்படுத்தி வருகிறது. துவரம் பருப்பானது  இந்திய உணவு வகைகளான தாள் (Dal) மற்றும் சாம்பார் தயாரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும்  இப்பருப்பில் புரதங்கள் மற்றும்  வைட்டமின்கள்  போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் உள்ளது. இந்த பயிரின் இலைகள் மற்றும் உமிகள் கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்தப்படுகிறது.

துவரையில் மரபணு வரிசைப்படுத்துதல்
மரபணு வரிசை(Genome sequencing)  கண்டறியும்  ஆய்விற்கு 'ஆஷா' (ICPL87119) என்ற துவரை இரகம் பயன்படுத்தப்பட்டது. ஆஷா இரகத்தின் இலையிலிருந்து  உயர் தரமான  டி என் ஏ (DNA) பிரித்தெடுக்கப்படுகிறது. பின்பு இந்த டி என் ஏ க்களை  மரபணு வரிசைபடுத்தும் இயந்திரத்தினுள் வைத்து  மரபணு வரிசைப்படுத்தப்படுகிறது. இந்த ஆய்வின் முடிவில் 511 Mb அளவுள்ள மரபணு வரிசை, 47,004 புரத குறியீட்டு மரபணுக்கள் (protein coding genes) மற்றும் 12,511 இடமாற்றக்கூடிய மூலகங்கள் (transposable elements) தொடர்புடைய மரபணுக்களை கண்டறிந்துள்ளனர்.  மேலும் இந்த ஆராய்ச்சியில் 1,213 நோய் எதிர்ப்பு திறனுடைய மரபணுக்கள் மற்றும்  உயிரற்ற அழுத்தத்தை (abiotic stress) தாங்கி வளரக்கூடிய 152 மரபணுக்களை கண்டறிந்துள்ளனர். உயிர் தகவலியல்(Bioinformatics) மென்பொருள் BLAST  உதவியுடன்  துவரையின் புரத குறியீட்டு மரபணுக்களோடு சோயாபீன்ஸ் புரத குறியீட்டு மரபணுக்களை ஒப்பிட்டு செய்து பார்த்த போது இவ்விரண்டு பயிர்களுக்கிடையே 67.94 %  புரத குறியீட்டு மரபணுக்கள் ஒரே மாதிரி உள்ளது என கண்டறிந்துள்ளனர்.

இந்த ஆராய்ச்சியினை இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (Indian Agricultural Research Institute) உட்பட்ட தேசிய உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சிமையம் (NRCPB-டெல்லி), பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம்(வாரனாசி), இந்திய பயறு வகை ஆராய்சி நிறுவனம்(கான்பூர்), வேளாண் அறிவியல் பல்கலைக் கழகம் (தார்வார்ட், கர்நாடகா), மற்றும் பஞ்சப்ராவ் தேஷ்முக் கிருஷி வித்யாபீடம்(அகோலா, மகாராஷ்டிரா) விஞ்ஞானிகளால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெற்றிகரமாக உலகில் முதன்முதலில் துவரையின் மரபணு வரிசையினை கண்டறிந்த இந்திய விஞ்ஞானிகளை நாமும் மனதார வாழ்த்துவோமே!
நன்றி: J. Plant Biochem. Biotechnol. (October, 2011), DOI 10.1007/s13562-011-0088-89.

குறிப்பு: இச்செய்தி வெளியிட தகவல்கள் தந்த நண்பர்கள் மற்றும் வேளாண் ஆராய்சியாளர்களான திரு. குமர குருபரன் மற்றும் முனைவர். கோவிந்தராஜ் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

Monday, October 24, 2011

சிவப்பு ஒயினில் உள்ள ரெஸ்வெராட்ரால் மார்பக புற்றுநோய் வளர்ச்சியை தடுக்கிறது


ரெஸ்வெராட்ரால் (Resveratrol) என்பது சிவப்பு ஒயினில் உள்ள "ஆரோக்கியமான" மூலப்பொருள் ஆகும். இது, ஈஸ்ட்ரோஜன் வளர்ச்சியை தடுப்பதன் மூலம் மார்பக புற்றுநோய் செல்கள்  வளர்ச்சியை தடுத்து நிறுத்துகிறது என்று சமீபத்திய ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது.

இந்த ஆராய்ச்சியை இத்தாலியில் உள்ள காலப்ரியா பல்கலைக்கழகம் (University of Calabria) மற்றும் அமெரிக்காவில் உள்ள பேய்லர் மருத்துவ கல்லூரியும் (Baylor College of Medicine) இணைந்து செய்துள்ளது. இந்த ஆராய்ச்சியில் ரெஸ்வெராட்ட லானது  ஹார்மோன் எதிர்ப்பு மார்பக புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது என்று  முதல் முறையாக விஞ்ஞானிகள்  கூறுகின்றனர்.

இந்த ஆராய்ச்சி செய்வதற்கு, ரெஸ்வெராட்ராலின் விளைவுகள் எப்படி உள்ளது என்பதை சோதிக்க ஈஸ்ட்ரோஜன் மார்பகபுற்றுநோய் செல் வரிசைகள் (Cell lines) பயன்படுத்தப்பட்டது. பின்பு ஆராய்ச்சியாளர்கள் ரெஸ்வெராட்டல் சிகிச்சையளித்த செல் வரிசை மற்றும் ரெஸ்வெராட்டல் சிகிச்சையளிக்காத செல் வரிசைகளில் புற்று நோயிற்கு காரணமான செல்வளர்ச்சி எவ்வாறு உள்ளது என் ஒப்பிட்டு பார்த்தனர். சிகிச்சை அளிக்கப்படாத(untreated) செல்களில் எந்தவித மாற்றமும் இல்லை. ஆனால் ரெஸ்வெராட்டல் சிகிச்சையளித்த(treated) செல் வரிசையில் புற்றுநோய்க்கு காரணமான செல்களின் வளர்ச்சி குறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

வருங்காலத்தில் மார்பக புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுப்பதில் ரெஸ்வெராட்ரால் ஒரு சாத்தியமான மருந்தியல் தீர்வாகும் என்றால் அது மிகையாகாது.

ஒயின்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமெனில் என்னுடைய முந்தைய பதிவின்  இணைப்பை பார்க்கவும்.
http://ashokkumarkn.blogspot.com/2011/09/blog-post.html

நன்றி :  The FASEB Journal, October 2011.
குறிப்பு: இந்த பதிவு சமீபத்திய‌ ஆய்வுமுடிவே தவிர ஒயின் அருந்த ஊக்கப்படுத்தும் பதிவல்ல. மேலும் மார்பக புற்று நோயை குணப்படுத்த தகுந்த மருத்துவரிடம் ஆலோசனை பெறவும்.

Saturday, October 22, 2011

கடுமையான வறட்சியினால் நிரந்தர சூழியலமைப்பில் சீர்குலைவு உண்டாகிறது



அடிக்கடி ஏற்படும் வறட்சி மற்றும் கடுமையான வறட்சியின் காரணமாக நிலத்தடி நீரானது மிக வேகமாக கீழிறங்குதல் மற்றும் நீரூற்றுகள் வற்றி பாலைவன சுற்றுச் சூழலுக்கு தள்ளப்படுவதால் பல அரிய வகை உயிரினங்களை அழிவிலிருந்து மீட்க முடியாது என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது. இந்த ஆராய்ச்சியை அமெரிக்காவில் உள்ள ஒரேகான் மாநில பல்கலைக்கழகம் (Oregon State University) கடந்த எட்டு வருடமாக ஆய்வு செய்துள்ளது.

காலநிலை மாற்றம் (Climate change) மற்றும் மக்கள் தொகை பெருக்கத்தினால் மனித பயன்பாட்டிற்கு நிலத்திலிருந்து அதிக அளவில் தண்ணீரை  எடுத்து உபயோக படுத்துதலினாலும் நிலத்தில் வாழும் உயிரினங்களின் வாழ்நிலை பாதிக்கிறது. மேலும் பல ஆண்டுகள் தொடர்ச்சியாக கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்ட நிலத்தில் பல்வேறு வகையான அரிய தாவர இனங்கள், பூச்சி இனங்கள் அடியோடு அழிந்து விடுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் காடுகளை அழிவிலிருந்து பாதுகாப்பது மற்றும் புதியதாக அதிக அளவில் மரங்களை நடுதல் போன்றவை மிக முக்கியமாக கருதப்படுகிறது. எனவே, காலநிலை மாற்றத்தினை நம்மால் இயன்ற அளவு குறைக்க நாமும் உதவிசெய்வோம். அரிய வகை உயிரினங்களை அழிவிலிருந்து காப்போம்!

Wednesday, October 19, 2011

தாவரங்கள் சூரிய ஒளியை பார்ப்பதற்கு உதவும் புரதங்கள்


தாவரங்களுக்கு கண்கள் மற்றும் கால்கள் இல்லை என்பது நாமறிந்ததே, ஆனால், வெளிச்சம் இல்லாத இடத்தில் வளரும் தாவரங்கள் ஒளியை பார்க்க ஒளியை நோக்கி வளரும் (அ) நகரும் இதையே ஒளியை நோக்கி வளர்தல் (Phototropism) என்று அழைக்கப்படுகிறது.  தாவரங்கள் ஒளியை நோக்கி வளர்வதற்கு தாவர செல்கள் மற்றும் புரதங்களுக்கு இடையே மூலக்கூறுகளின் சமிக்ஞைகள்(signals) தான் காரணமென்று ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் தாவரங்கள் ஒளியை நோக்கி வளரும் போது அதன் செல்கள் நீட்சி (Cell elongation) அடைகிறது என்றும் கூறப்படுகிறது.

தாவரங்கள் வளர்வது ஒளி வரும் திசையை சார்ந்து உள்ளது. இதற்கு ஒளியை உணரும் புரதங்களான  phototropin1 (PHOT1) மற்றும் phototropin2 (PHOT2) காரணமாக உள்ளது. இந்த புரதங்கள் ஒளி வாங்கிகள் (photoreceptors) போன்று செயல்படுகிறது. அதாவது இந்த புரதங்கள் சூரியன் வெளியிடுகிற புறஊதாக் கதிர்களிலுள்ள நீல ஒளியை (Blue light) உள்வாங்கிக்கொள்கிறது. இவ்விரு புரதங்களோடு Non-Phototropic Hypocotyl3 (NPH3) என்ற மூன்றாவது புரதம் இணைந்து  தாவரங்கள் ஒளியை நோக்கி வளர்வதற்கு சமிக்ஞை (signal) தருகிறது. இது சார்ந்த ஆராய்ச்சிகளை அராபிடோப்சிஸ் தாவரத்தில் மிசோரி பல்கலைக்கழக (University of Missouri) விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ளனர்.

Monday, October 17, 2011

சோளத்தில் பூ பூப்பதை தடுப்பதன் மூலம் எரிசக்தி அதிகமாக கிடைக்கிறது


சோளப் பயிர் ஆப்பிரிக்காவை பிறப்பிடமாக கொண்ட ஒரு புல் வகையை சேர்ந்த தாவரம் ஆகும். இப்பயிரானது, இந்தியா மற்றும் உலக நாடுகளில் தானியம் மற்றும் தீவனத்திற்காக பயிரிடப்பட்டு வருகிறது. சோள தானியமானது பல்வேறு நாடுகளில் சுமார் 300 மில்லியன் மக்களின் உணவில் முக்கிய பங்குவகிக்கிறது. இத்தகைய சோளத்திலிருந்து லிக்னோசெல்லுலோயிக் சார்ந்த உயிரி எரிபொருள் (Biofuel) கிடைக்கிறது என்று ஆய்வுகள் மூலமாக கண்டறியப்பட்டுள்ளது.

சமீபத்தில் டெக்ஸாஸ் அக்ரிலைஃப் (Texas AgriLife) நிறுவனத்தின் ஆய்வுக்குழுவினால் சோளத்தில் பூ பூப்பதை ஒழுங்குபடுத்தும் மரபணு கண்டறியப்பட்டது. பூ பூப்பதிற்கு காரணமான மரபணுவின் செயல்பாட்டை கட்டு படுத்தி எரிபொருளுக்கு பயன்படுத்தும் பயிர்களில் பூ பூப்பதை  தடுப்பதினால் மூன்று மடங்கு அதிக  உயிரி எரிசக்தி (Bioenergy)  கிடைக்கிறது என்று ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ஆராய்ச்சியில் சடுதி மாற்றத்திற்கு (mutation)  உட்படுத்திய‌ சில சோள ஜீனோடைப்களில் பூ பூப்பதற்கு காரணமான மரபணு (எம்ஏ 4-1) செயலிழந்துள்ளதன் மூலம் பூ பூத்தல் தாமதமடைகிறது என கண்டறிந்துள்ளனர். இந்த மரபணு இதற்கு முன்பு இதே நிறுவனத்தினால் கண்டுபிடுத்துள்ள எம்ஏ 1 (Ma 1) மரபணுவை விட செயல்பாட்டில் மாறுபட்டுள்ளது எனவும் கண்டறிந்துள்ளனர்.

சாதாரணமாக தானிய சோளமானது(Grain sorghum) 60 நாட்களில் பூ பூத்துவிடும். ஆனால் இந்த பூ பூப்பதற்கு காரணமான மரபணுவை கட்டுபடுத்திய எரிசக்திக்கு பயன்படுத்த கூடிய சோளத்தில் 200 நாட்கள் வரை பூ பூப்பது தாமதமாகிறது. இதனால் மூன்று மடங்கு அதிக  உயிரி எரிசக்தி கிடைக்கிறது. இதனால் தற்போது தானிய சோளம் மற்றும் தீவன சோளத்திற்கென்று தனித்தனியே இரகங்கள் உள்ளது போன்று எரிசக்திக்கென்று  வெளியிடும் இரகங்களால் இனிவரும் காலங்களில் சோளம் உணவு மற்றும் தீவனத்திற்கு என்றில்லாமல் உயிரி எரிபொருள் பெறுவதிலும் மிக முக்கிய பக்குவகிக்க போகிறது என்பதில் சிறிதும் ஐயமில்லை.

குறிப்பு: இந்த கட்டுரையை  மே-2013 அறிக அறிவியல் மாத இதழில் வெளியிட்டுள்ளேன்.

Tuesday, August 2, 2011

குளோனிங் பசுவில் கிடைக்கும் தாய்ப்பால்


அறிமுகம்
அறிவியல் வளர்ச்சியில் உயிரி தொழில்நுட்பம் (Biotechnology) மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்பதற்கான மற்றுமொரு உதாரணம்  தான் இந்த குளோனிங் பசுவில் கிடைக்கும் தாய்ப்பால். இதற்கு முன்பு ஸ்காட்லான்டில் உள்ள ராஸ்லான்ட் நிறுவனத்தில் 1997 ஆம் ஆண்டு முதன் முதலாக குளோனிங் ஆடு (அ) படியாக்க ஆடு  டோலி  (Dolly) கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு ஆஸ்ட்ரேலியாவில் குளோனிங் பசு (அ) படியாக்கம் செய்த பசு 2000ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டு அதற்கு சுசி  (Suzi) என்று பெயரிடப்பட்டது. இந்த குளோனிங் பசு சுசி யிலிருந்து கிடைக்கும் பால் மற்ற சாதாரண பசுக்களின் பாலைப் போல் இருந்தது.  இதற்கு பிறகு குளோனிங் மூலம்  பன்றி, எலி, பூனை மற்றும் நாய் போன்ற பல்வேறு விலங்குகள் உருவாக்கப்பட்டுள்ளன.

எவ்வாறு உருவாக்கப்பட்டது?
தற்போது  அர்ஜென்டினா விஞ்ஞானிகளால் உலகில் முதன் முறையாக  குளோனிங் பசுவின் பால் தாய்ப்பாலுக்கு சமமானது என கண்டறியப் பட்டுள்ளது. இந்த படியாக்கம் செய்த பசுவிற்கு (குளோனிங் பசு) ரோஸிட்டா ஐஎஸ்ஏ (Rosita ISA) என்று பெயரிடப்பட்டுள்ளது.  தாய்பாலில் உள்ள லாக்டோபெரின் (Lactoferrin) மற்றும் லைசோசைம் (Lysozyme) எனும் இரண்டு புரதங்களை படியாக்கம் (குளோனிங்) தொழில்நுட்பம் மூலம் உட்செலுத்தி பெறப்பட்டதே இந்த குளோனிங் பசு ஆகும். மேலும் இந்த  லாக்டோபெரின் மற்றும் லைசோசைம் புரதங்கள் பாக்டீரியா மற்றும் வைரஸ் போன்ற நச்சுயிரிகளுக்கு நோய் எதிர்பு திறனுடையது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய‌ ஆராய்ச்சியை அர்ஜென்டினைன் நிறுவனம் மற்றும்  சான் மார்டின் தேசிய பல்கலைக் கழகமும் இணைந்து  செய்துள்ளது.

நிலக்கடலையும் அதன் பயன்களும்

முனைவர் க. அசோக்குமார் உதவிப் பேராசிரியர் வேளாண் துறை, பிரிஸ்ட் பல்கலைக்கழகம், வல்லம், தஞ்சாவூர், 613 403. அறிமுகம்: நிலக்...