Saturday, July 7, 2012

கரோட்டினாய்டுகளும் அதன் பயன்களும்


கரோட்டினாய்டுகள் என்றால் என்ன?
கரோட்டினாய்டுகள் (Carotenoids) என்பது தாவரங்களின் குளோரோபிளாஸ்ட் மற்றும் குரோமோபிளாஸ்டுகளில் காணப்படும் டெட்ராடெர்பினாய்டு  கரிம நிறமிகள்  (tetraterpenoid organic pigments) ஆகும். மேலும் இந்த கரோட்டினாய்டுகள் ஒளிச்சேர்க்கை செய்யும் உயிரினங்களான பாசி (algae), சில வகை பூஞ்சை (fungus) மற்றும் பாக்டீரியாவில் உள்ளது. எனினும்  கரோட்டினாய்டுகள் மனிதன் மற்றும் விலங்குகளில் உற்பத்தி செய்யப்படுவது இல்லை. இதுவரை சுமார் 600 கரோட்டினாய்டுகள் கன்டறியப்பட்டுள்ளன. பொதுவாக கரோட்டினாய்டுகள் இரண்டு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அதாவது, சாந்தோபில்கள் (ஆக்சிஜன் கொண்டிருக்கும்) மற்றும் கரோட்டினின் (முற்றிலும் ஹைட்ரோகார்பன்கள் கொண்டிருக்கும்).

கரோட்டினாய்டுகள் குறைவினால் உண்டாகும் விளைவுகள்
தற்போதுள்ள சூழ்நிலையில் உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் 2.5 லட்சத்திலிருந்து - 5 லட்சம் மக்கள் வைட்டமின் ஏ (Vitamin A) குறைபாட்டினால் கண்பார்வையை இழக்கினர் என கணக்கிடப்பட்டுள்ளது. இதில்  ஆசிய நாடுகளை சார்ந்த மக்களே அதிக அளவில் பார்வைகுறைபாடு நோயினால் பாதிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதுஇத்தகைய பார்வை இழப்பிற்கு வைட்டமின் குறைபாடே மிக முக்கியகாரணமாக உள்ளதுஇந்த வைட்டமின்   குறைபாட்டிற்கு வறுமையில் உள்ள மக்கள் போதுமான அளவு ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை உட்கொள்ளாததும், வேளைப்பளுவில் சரிவர சாப்பிடாமல் இருப்பது மற்றும்  சத்துக்கள் மிகுந்த உணவுகளை சாப்பிடாமல்  ஊட்டச்சத்துகள் குறைந்த மேற்கத்திய கலாச்சார உணவுகளை உட்கொள்வதும்  காரணமாக உள்ளதுமேலும் கரோட்டினாய்டுகள் குறைபாட்டினால் உடலில் நோய் எதிர்ப்புதிறன்   குறைகிறது.

கரோட்டினாய்டுகள் எந்தெந்த உணவுகளில் அதிகமாக உள்ளது?
பொதுவாக கரோட்டினாய்டுகளானது  மஞ்சள், சிவப்பு, மற்றும் பச்சை நிறமுடைய காய்கறிகள், பழங்கள், தானியங்கள், தக்காளி, காரட், மக்காச்சோளம், சர்க்கரை வள்ளிக்கிழங்கு மற்றும் பருப்பு வகைகளில் மிகுந்து காணப்படுகிறது. நிறமற்ற காய்கறிகள் மற்றும் பழங்களில் (.தா. வெள்ளை நிற காலிபிளவர்) கரோட்டினாய்டுகள்   குறைவாக உள்ளது

கரோட்டினாய்டுகளின் பயன்கள்
சுமார் 40 க்கும் மேற்பட்ட கரோட்டினாடுய்களானது நாம் சாப்பிடும் உணவுகளில் உள்ளது.  இவற்றில்  பீட்டா கரோட்டீன் (β-carotene) மற்றும் பீட்டா கிரிப்டோசாந்தின் (β-cryptoxanthin) என்கிற கரோட்டினாய்டுகள் மனிதனுக்கு வைட்டமின் (Vitamin A) கிடைப்பதற்கு முன்னோடியாக உள்ளதுமேலும் இத்தகைய கரோட்டினாய்டுகள் எலும்பு வளர்ச்சி, இனப்பெருக்கம், செல் பிரிவு மற்றும்  செல் வேறுபாட்டில் முக்கிய பங்குவகிக்கிறது.

கரோட்டினாய்டுகளில், லூடின் (Lutein) மற்றும் சியாசாந்தின் (Zeaxanthin)  மட்டுமே கண்ணின் விழித்திரையின் கரும்புள்ளி பகுதியில் உள்ளதோடு மட்டுமில்லாமல்  விழித்திரையை சீரழியாமல் பாதுகாத்து கண்பார்வைக்கு வழிவகுக்கிறது. மேலும் இவ்விரு கரோட்டினாய்டுகளும் புற ஊதாக்கதிர்களினால் தோல் பாதிப்படையாமல் தடுப்பதற்கும், இருதய  நோய்கள் வராமல் தடுப்பது மற்றும் கண்புரை (Cataract) நோய்களிலிருந்து கண்களை பாதுகாப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

பருப்பு வகைகளில் உள்ள கரோட்டினாய்டுகள்
பருப்பு வகைகளான பட்டாணி (pea), கொண்டை கடலை (chick pea), மற்றும் சாம்பார் பருப்புகளில் (lentils/dhal) நான் ஆராய்ச்சி மேற்கொண்டதில் சுமார் பதினைந்திற்கும் மேற்பட்ட கரோட்டினாய்டுகள் உள்ளதென கண்டறியப்பட்டது. இந்த கரோட்டினாய்டுகளில் லூடின் ஆனது மிக அதிக அளவில்  மேற்கூறிய மூன்று பருப்புகளிலும் உள்ளது. வைட்டமின் விற்கு காரணமான பீட்டா கரோட்டின் ஆனது  மஞ்சள் நிற பருப்புகளை விட பச்சை நிற பருப்புகளில் அதிக அளவில் உள்ளது.  மேலும், பருப்புகளில் சியாசாந்தின் (Zeaxanthin), வயலோசாந்தின் (Violaxanthin) போன்ற கரோட்டீனாய்டுகளும் குறிப்பிட்ட அளவில் உள்ளதென எனது ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.  நன்றி:  தாவர அறிவியல் துறை, சஸ்காச்சூவான் பல்கலை கழகம், சாஸ்கடூன், கனடா.

குறிப்பு: இந்த கட்டுரையை  மே-2013 அறிக அறிவியல் மாத இதழில் வெளியிட்டுள்ளேன்.

Friday, January 13, 2012

பொங்க‌ல் ப‌ண்டிகை எங்க‌ள் பண்டிகை!


உழ‌வ‌னால்...
க‌ழ‌னி திருத்தி
வ‌ய‌லை ந‌ன்கு உழுது
எரு இட்டு
நெல்லினை விதைத்து
க‌ளையெடுத்து,
அறுவடை செய்த நெல்ம‌ணிக‌திர்களை
வீட்டுக்கு கொண்டு வ‌ந்து
புதுநெல்லில் இருந்து
சிறிது எடுத்து
உர‌லில் போட்டு குத்தி அரிசியாக்கி
பொங்க‌ல‌ன்று வீட்டுமுற்றத்தில் கோலமிட்டு
தலை வாழையிலையில் நிறைகுடம் வைத்து
சாணத்தில் பிள்ளையார் பிடித்து
விளக்கேற்றி வைத்து விட்டு
புதுப்பானையின் கழுத்தில்
புதுமஞ்சளை காப்பாக அணிந்து
பானையினுள் அரிசியும்,பாலும்,
சர்க்க‌ரை பாகும்,
ப‌ருப்பும் இட்டு பொங்கி
இஞ்சியும், க‌ரும்பும்,கற்க‌ண்டும்
இய‌ற்கை தெய்வ‌மான‌ க‌திர‌வ‌னுக்கு ப‌டைத்து
குடும்பத்துடன்
 பொங்கலோ‌ பொங்கல்‌என்று உறக்க‌ கூவி
கொண்டாடி ம‌கிழும் விழாவே
பொங்க‌ல் பண்டிகை!
பொங்க‌ல் ப‌ண்டிகை
எங்க‌ள் பண்டிகை!
ஒவ்வொரு த‌மிழ‌னின் பண்டிகை!

Friday, January 6, 2012

செயற்கை விதைகள் (Synthetic seeds)


இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் மக்கள் தொகை பெருக்கத்திற்கேற்ப நாம் நமக்கு தேவையான உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து உணவுத்தேவையை பூர்த்தி செய்யவேண்டிய காலகட்டத்தில் உள்ளோம். சமீபகாலமாக வேளாண்மையில் உணவுப் பொருள்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கு பல நவீன யுக்திகளை பயன்படுத்தி வருகின்றனர். அவற்றில் தற்பொழுது உயிரி தொழில் நுட்பவியல் (Biotechnology) துறை சார்ந்த பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது.  இதில் திசுவளர்ப்பு (Tissue culture) முறையின் மூலமாக செயற்கை விதைகள் உருவாக்கப்படுகிறது.  பொதுவாக விதைகளானது பயிர்களில் கருவுறுதல் நடைபெற்றபிறகு சூற்பைகளில் உள்ள சூல்கள் விதைகளாக மாறுகிறது. இவ்விதையில் கருவிற்கு வேண்டிய ஊட்டப்பொருள்கள் சேமித்து வைக்கப்படுகிறது. ஆனால் திசுவளர்ப்பின் மூலமாக இழைமத் திசுவிலிருந்து (Callus) பெறப்பட்ட  கருவுறுக்களை (Embryoids) ஹைட்ரோ ஜெல்லில் (.தா: கால்சியம் ஆல்ஜினேட்) சேமித்து வைத்து உறையிடப்பட்டு செயற்கை விதை உருவாக்கப்படுகிறது. எனவே, இத்தகைய பாதுகாக்கப்பட்ட கருவுருக்களை உறையிடப்பட்டு (encapsulation) ஆய்வகங்களில் வளர்க்கப்பட்ட பயிரின் மொட்டுகள், கிழங்கின் பகுதிகள் மற்றும் ஆக்குத் திசுவிலிருந்து பெறப்பட்ட சிறு செடிகளை செயற்கை விதைகள் என்றழைக்கப்படுகிறது.

உடல கருக்கள் (Somatic embryos) சைகோடிக் கருவிற்கு ஒப்பானவை என்றாலும் பாதுகாக்கப்பட்ட சூழ்நிலையில் உள்ள ஆய்வுக்கூடத்தில் மட்டுமே வளர்க்க முடியும். உடல கருவுருக்களுக்கு விதையுறை இல்லாத காரணத்தால் இதை திசுவளர்ப்பு ஊடகத்தில் வளர்ச்சி ஊக்கிகளை (ஆக்ஸின் மற்றும் சைட்டோகைனின்) சரியான விகிதத்தில் கலந்து அதில் இழைமத்திசுவை (காலஸ்) வளர்த்து அதிலிருந்து  கருவுருக்கள் (Embryoids) பெறப்படுகிறதுசெயற்கை விதைகளை எளிதாக நுண்ணுயிர்கள் தாக்கிவிடும் தன்மை கொண்டது. மேலும் இவ்விதைகள் விரைவில் நீரை இழந்து உலர்ந்துவிடும். எனவே, இதை தவிர்ப்பதற்கு கால்சியம் ஆல்ஜினேட் என்ற வேதிப்பொருளால் கருவுருவைச் சுற்றி உறை உண்டாக்கப்படுகிறது. இத்தகைய விதைகள் நிலத்தில் பயிரிடும் போது சூழ்நிலைகளால் பாதிக்காமல் சாதாரண விதைகளைப் போன்றே செயல்படுவதாக பல்வேறு ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றது.

செயற்கை விதையின் வகைகள்:
உற்பத்தி செய்யும் முறையினை பொருத்து செயற்கை விதைகளானது இரண்டு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அவைகளைப்பற்றி கீழே விரிவாக காண்போம்.

1. வேதிப்பொருள் மூலம் உறையிடப்பட்ட விதைகள் (Hydrated seeds)
இந்த முறையில் உடல கருவுருவானது  கால்சியம் ஆல்ஜினேட் என்ற வேதிப்பொருளால் உறையிடப்பட்டு செயற்கை விதைகள் உருவாக்கப்படுகிறது. இவ்விதைகள் 4 முதல் 6 மி.மீ  விட்டம் அளவு கொண்டது. வேதிப்பொருள் மூலம்  உறையிடப்பட்ட செயற்கை விதைகளை நேரிடையாகவோ அல்லது தண்ணீரில் கலந்தோ நிலத்தில் பயிரிடலாம். இந்த முறையில் உருவாக்கிய விதைகளை குறைந்த வெப்பநிலையில் குறைவான காலத்திற்கு மட்டுமே சேமித்து வைக்க முடியும்.

 2. உலர்த்திய விதைகள் (Desiccated seeds)
இம்முறையில் பாலி ஆக்ஸி எத்திலின் கிளைக்கால் என்ற உறையிடும் பொருளினால் செயற்கை விதைகள் உருவாக்கப்படுகிறது. உலர்த்தப்பட்ட உடல கருவுருக்களை பாலிஆக்ஸி எத்திலின் கிளைக்கால் (PEG) உடன் கலந்து  உடல கருவுருக்களுக்கு உறையிடப்படுகிறது. இந்த உறையிடப்பட்ட விதைகளை சிறிது நேரம் உலர வைக்கப்பட்டு செயற்கை விதைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தமுறையினால் கருவுருக்கள் அதிகமாக சேதாரமடைவதற்கு வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.


செயற்கை விதைகளை உருவாக்கும் வழிநிலைகள் 
(Procedure for production of Synthetic seeds)


தாவர வகைகளைப் பொறுத்து செயற்கை விதைகளை உற்பத்தி செய்யும் வழிநிலைகள்/ தொழில் நுட்பம் வேறுபடுகிறது.

செயற்கை விதையின் பயன்கள்:
வேளாண்மையில் செயற்கை விதையானது பல வகையான பயன்பாடுகளை கொண்டுள்ளது. ஆனால் செயற்கை விதையின் பயன்பாடுகள் சிற்றினங்களுக்கிடையே வேறுபடுகிறது. செயற்கை விதை பொதுவாக தன் மகரந்த சேர்க்கையுறும் தாவரங்களுக்கு பயன்படுவதில்லை. ஆனால் அயல் மகரந்தச் சேர்க்கையுறும் (Cross pollinated) தாவரங்களில் இது பற்பல பயன்பாடுகளை கொண்டுள்ளது. இதன் பல்வேறுவகையான பயன்களை கீழே காண்போம்.

1.மலட்டுத்தன்மையுடைய (Sterility) அல்லது விதையினால் உற்பத்தி செய்ய இயலாத பயிர்களை அதிக அளவில்  இனப்பெருக்கம் செய்து பயிரிடுவதற்கு உதவுகிறது.
 2.கலப்பின விதைகளை உருவாக்குவதற்கு செயற்கைவிதையில் மிகப்பெரிய வாய்ப்புள்ளது. (.தா) மகர்ந்தச்சேர்க்கையுறாத (அல்ஃபால்பா), பூ ஒட்டிக்கொள்ளுதல் (பருத்தி), மகரந்த முன்முதிர்வு (சோயாபீன்ஸ்), ஆண் மலட்டுத்தன்மை (தக்காளி & தர்பூசனி) போன்ற தாவரங்களில் கலப்பின விதைகள் உருவாக்குவது கடினம். ஆனால் செயற்கை விதை முறையைப் பயன்படுத்தி மேற்கூறிய பயிர்களில் கலப்பின விதைகளை உருவாக்க முடியும்.
3.செயற்கை விதைகள் தூயதன்மை (Purity) உடையது.
4.மரபியல்படி வேறுபாடுடைய தாவரங்களை (Genetically heterozygous plants) செயற்கை விதைகள் மூலமாக சேமித்துவைக்க முடியும்.
5. கடின விதைகள் (Recalcitrant seeds) வகைகளையும் செயற்கை விதை முறையில் உற்பத்தி செய்யலாம்.
6.குறைவான காலத்தில் புதிய வகை செயற்கைவிதைகளை அதிக அளவில் உற்பத்தி செய்ய இயலும்.
7.செயற்கை விதைகளை வருடத்தின் எந்த நேரத்திலும், எந்த பருவத்திலும் உற்பத்தி செய்ய முடியும்.
8. மரபுத்தன்மையை பாதுகாக்க செயற்கை விதைகள் பயன்படுகிறது.
9.செயற்கை விதைகளின் விலை கலப்பின விதைகளைவிட  குறைவு.
10.கலப்பின முறையின் மூலமாக கிடைத்த தாவரத்தை பெருக்குவதற்கும் செயற்கை விதை உதவுகிறது.

வியபார ரீதியாக செயற்கை விதை உருவாக்குவதில் ஏற்படும் பிரச்சினைகள்
1.செயற்கை விதைகளை அதிக அளவில் உற்பத்தி செய்வதற்கு தரமான உடல கருவுருக்கள் தேவைப்படுகிறது. ஆனால் தற்போதுள்ள சூழ்நிலையில் உடல கருவுருக்கள் அதிக அளவில் கிடைப்பது அரிதாக உள்ளது.
2.ஊட்டச்சத்துகள் மற்றும் ஆக்ஸிஜன் குறைபாட்டினால் செயற்கை விதைகளின் முளைப்புத்திறன் குறைகிறது.
3.செயற்கை விதைகள் திசுவளர்ப்பு முறையில் வளர்க்கப்படுவதால் உடலச்செல் வளர்ப்பில் வேறுபாடுகள் (Somaclonal variation) காணப்படுகிறது.
நிலக்கடலையும் அதன் பயன்களும்

முனைவர் க. அசோக்குமார் உதவிப் பேராசிரியர் வேளாண் துறை, பிரிஸ்ட் பல்கலைக்கழகம், வல்லம், தஞ்சாவூர், 613 403. அறிமுகம்: நிலக்...