Monday, October 24, 2011

சிவப்பு ஒயினில் உள்ள ரெஸ்வெராட்ரால் மார்பக புற்றுநோய் வளர்ச்சியை தடுக்கிறது


ரெஸ்வெராட்ரால் (Resveratrol) என்பது சிவப்பு ஒயினில் உள்ள "ஆரோக்கியமான" மூலப்பொருள் ஆகும். இது, ஈஸ்ட்ரோஜன் வளர்ச்சியை தடுப்பதன் மூலம் மார்பக புற்றுநோய் செல்கள்  வளர்ச்சியை தடுத்து நிறுத்துகிறது என்று சமீபத்திய ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது.

இந்த ஆராய்ச்சியை இத்தாலியில் உள்ள காலப்ரியா பல்கலைக்கழகம் (University of Calabria) மற்றும் அமெரிக்காவில் உள்ள பேய்லர் மருத்துவ கல்லூரியும் (Baylor College of Medicine) இணைந்து செய்துள்ளது. இந்த ஆராய்ச்சியில் ரெஸ்வெராட்ட லானது  ஹார்மோன் எதிர்ப்பு மார்பக புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது என்று  முதல் முறையாக விஞ்ஞானிகள்  கூறுகின்றனர்.

இந்த ஆராய்ச்சி செய்வதற்கு, ரெஸ்வெராட்ராலின் விளைவுகள் எப்படி உள்ளது என்பதை சோதிக்க ஈஸ்ட்ரோஜன் மார்பகபுற்றுநோய் செல் வரிசைகள் (Cell lines) பயன்படுத்தப்பட்டது. பின்பு ஆராய்ச்சியாளர்கள் ரெஸ்வெராட்டல் சிகிச்சையளித்த செல் வரிசை மற்றும் ரெஸ்வெராட்டல் சிகிச்சையளிக்காத செல் வரிசைகளில் புற்று நோயிற்கு காரணமான செல்வளர்ச்சி எவ்வாறு உள்ளது என் ஒப்பிட்டு பார்த்தனர். சிகிச்சை அளிக்கப்படாத(untreated) செல்களில் எந்தவித மாற்றமும் இல்லை. ஆனால் ரெஸ்வெராட்டல் சிகிச்சையளித்த(treated) செல் வரிசையில் புற்றுநோய்க்கு காரணமான செல்களின் வளர்ச்சி குறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

வருங்காலத்தில் மார்பக புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுப்பதில் ரெஸ்வெராட்ரால் ஒரு சாத்தியமான மருந்தியல் தீர்வாகும் என்றால் அது மிகையாகாது.

ஒயின்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமெனில் என்னுடைய முந்தைய பதிவின்  இணைப்பை பார்க்கவும்.
http://ashokkumarkn.blogspot.com/2011/09/blog-post.html

நன்றி :  The FASEB Journal, October 2011.
குறிப்பு: இந்த பதிவு சமீபத்திய‌ ஆய்வுமுடிவே தவிர ஒயின் அருந்த ஊக்கப்படுத்தும் பதிவல்ல. மேலும் மார்பக புற்று நோயை குணப்படுத்த தகுந்த மருத்துவரிடம் ஆலோசனை பெறவும்.

Saturday, October 22, 2011

கடுமையான வறட்சியினால் நிரந்தர சூழியலமைப்பில் சீர்குலைவு உண்டாகிறது



அடிக்கடி ஏற்படும் வறட்சி மற்றும் கடுமையான வறட்சியின் காரணமாக நிலத்தடி நீரானது மிக வேகமாக கீழிறங்குதல் மற்றும் நீரூற்றுகள் வற்றி பாலைவன சுற்றுச் சூழலுக்கு தள்ளப்படுவதால் பல அரிய வகை உயிரினங்களை அழிவிலிருந்து மீட்க முடியாது என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது. இந்த ஆராய்ச்சியை அமெரிக்காவில் உள்ள ஒரேகான் மாநில பல்கலைக்கழகம் (Oregon State University) கடந்த எட்டு வருடமாக ஆய்வு செய்துள்ளது.

காலநிலை மாற்றம் (Climate change) மற்றும் மக்கள் தொகை பெருக்கத்தினால் மனித பயன்பாட்டிற்கு நிலத்திலிருந்து அதிக அளவில் தண்ணீரை  எடுத்து உபயோக படுத்துதலினாலும் நிலத்தில் வாழும் உயிரினங்களின் வாழ்நிலை பாதிக்கிறது. மேலும் பல ஆண்டுகள் தொடர்ச்சியாக கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்ட நிலத்தில் பல்வேறு வகையான அரிய தாவர இனங்கள், பூச்சி இனங்கள் அடியோடு அழிந்து விடுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் காடுகளை அழிவிலிருந்து பாதுகாப்பது மற்றும் புதியதாக அதிக அளவில் மரங்களை நடுதல் போன்றவை மிக முக்கியமாக கருதப்படுகிறது. எனவே, காலநிலை மாற்றத்தினை நம்மால் இயன்ற அளவு குறைக்க நாமும் உதவிசெய்வோம். அரிய வகை உயிரினங்களை அழிவிலிருந்து காப்போம்!

Wednesday, October 19, 2011

தாவரங்கள் சூரிய ஒளியை பார்ப்பதற்கு உதவும் புரதங்கள்


தாவரங்களுக்கு கண்கள் மற்றும் கால்கள் இல்லை என்பது நாமறிந்ததே, ஆனால், வெளிச்சம் இல்லாத இடத்தில் வளரும் தாவரங்கள் ஒளியை பார்க்க ஒளியை நோக்கி வளரும் (அ) நகரும் இதையே ஒளியை நோக்கி வளர்தல் (Phototropism) என்று அழைக்கப்படுகிறது.  தாவரங்கள் ஒளியை நோக்கி வளர்வதற்கு தாவர செல்கள் மற்றும் புரதங்களுக்கு இடையே மூலக்கூறுகளின் சமிக்ஞைகள்(signals) தான் காரணமென்று ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் தாவரங்கள் ஒளியை நோக்கி வளரும் போது அதன் செல்கள் நீட்சி (Cell elongation) அடைகிறது என்றும் கூறப்படுகிறது.

தாவரங்கள் வளர்வது ஒளி வரும் திசையை சார்ந்து உள்ளது. இதற்கு ஒளியை உணரும் புரதங்களான  phototropin1 (PHOT1) மற்றும் phototropin2 (PHOT2) காரணமாக உள்ளது. இந்த புரதங்கள் ஒளி வாங்கிகள் (photoreceptors) போன்று செயல்படுகிறது. அதாவது இந்த புரதங்கள் சூரியன் வெளியிடுகிற புறஊதாக் கதிர்களிலுள்ள நீல ஒளியை (Blue light) உள்வாங்கிக்கொள்கிறது. இவ்விரு புரதங்களோடு Non-Phototropic Hypocotyl3 (NPH3) என்ற மூன்றாவது புரதம் இணைந்து  தாவரங்கள் ஒளியை நோக்கி வளர்வதற்கு சமிக்ஞை (signal) தருகிறது. இது சார்ந்த ஆராய்ச்சிகளை அராபிடோப்சிஸ் தாவரத்தில் மிசோரி பல்கலைக்கழக (University of Missouri) விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ளனர்.

Monday, October 17, 2011

சோளத்தில் பூ பூப்பதை தடுப்பதன் மூலம் எரிசக்தி அதிகமாக கிடைக்கிறது


சோளப் பயிர் ஆப்பிரிக்காவை பிறப்பிடமாக கொண்ட ஒரு புல் வகையை சேர்ந்த தாவரம் ஆகும். இப்பயிரானது, இந்தியா மற்றும் உலக நாடுகளில் தானியம் மற்றும் தீவனத்திற்காக பயிரிடப்பட்டு வருகிறது. சோள தானியமானது பல்வேறு நாடுகளில் சுமார் 300 மில்லியன் மக்களின் உணவில் முக்கிய பங்குவகிக்கிறது. இத்தகைய சோளத்திலிருந்து லிக்னோசெல்லுலோயிக் சார்ந்த உயிரி எரிபொருள் (Biofuel) கிடைக்கிறது என்று ஆய்வுகள் மூலமாக கண்டறியப்பட்டுள்ளது.

சமீபத்தில் டெக்ஸாஸ் அக்ரிலைஃப் (Texas AgriLife) நிறுவனத்தின் ஆய்வுக்குழுவினால் சோளத்தில் பூ பூப்பதை ஒழுங்குபடுத்தும் மரபணு கண்டறியப்பட்டது. பூ பூப்பதிற்கு காரணமான மரபணுவின் செயல்பாட்டை கட்டு படுத்தி எரிபொருளுக்கு பயன்படுத்தும் பயிர்களில் பூ பூப்பதை  தடுப்பதினால் மூன்று மடங்கு அதிக  உயிரி எரிசக்தி (Bioenergy)  கிடைக்கிறது என்று ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ஆராய்ச்சியில் சடுதி மாற்றத்திற்கு (mutation)  உட்படுத்திய‌ சில சோள ஜீனோடைப்களில் பூ பூப்பதற்கு காரணமான மரபணு (எம்ஏ 4-1) செயலிழந்துள்ளதன் மூலம் பூ பூத்தல் தாமதமடைகிறது என கண்டறிந்துள்ளனர். இந்த மரபணு இதற்கு முன்பு இதே நிறுவனத்தினால் கண்டுபிடுத்துள்ள எம்ஏ 1 (Ma 1) மரபணுவை விட செயல்பாட்டில் மாறுபட்டுள்ளது எனவும் கண்டறிந்துள்ளனர்.

சாதாரணமாக தானிய சோளமானது(Grain sorghum) 60 நாட்களில் பூ பூத்துவிடும். ஆனால் இந்த பூ பூப்பதற்கு காரணமான மரபணுவை கட்டுபடுத்திய எரிசக்திக்கு பயன்படுத்த கூடிய சோளத்தில் 200 நாட்கள் வரை பூ பூப்பது தாமதமாகிறது. இதனால் மூன்று மடங்கு அதிக  உயிரி எரிசக்தி கிடைக்கிறது. இதனால் தற்போது தானிய சோளம் மற்றும் தீவன சோளத்திற்கென்று தனித்தனியே இரகங்கள் உள்ளது போன்று எரிசக்திக்கென்று  வெளியிடும் இரகங்களால் இனிவரும் காலங்களில் சோளம் உணவு மற்றும் தீவனத்திற்கு என்றில்லாமல் உயிரி எரிபொருள் பெறுவதிலும் மிக முக்கிய பக்குவகிக்க போகிறது என்பதில் சிறிதும் ஐயமில்லை.

குறிப்பு: இந்த கட்டுரையை  மே-2013 அறிக அறிவியல் மாத இதழில் வெளியிட்டுள்ளேன்.

நிலக்கடலையும் அதன் பயன்களும்

முனைவர் க. அசோக்குமார் உதவிப் பேராசிரியர் வேளாண் துறை, பிரிஸ்ட் பல்கலைக்கழகம், வல்லம், தஞ்சாவூர், 613 403. அறிமுகம்: நிலக்...