
அறிமுகம்
தாவரவியல்படி முந்திரியின் பேரினம்
அனகார்டியம், ஆகும்.
இதன் அறிவியல் பெயர் அனகார்டியம் ஆக்ஸிடென்டேல் மற்றும்
அனகார்டியேசியே குடும்பத்தை சேர்ந்ததாகும். இது மர வகையை சார்ந்த பணப்பயிராக உள்ளது. முந்திரியின் தோற்றம்
பிரேசில் ஆகும். இதனை உலகம்
முழுவதும் பரவச்செய்தது போர்த்துகீசியர்கள். தற்போது பிரேசில், வியட்னாம்,
இந்தியா மற்றும் பல ஆப்பிரிக்க
நாடுகளில் வணிகரீதியாக முந்திரி பயிரிடப்படுகிறது. முந்திரி
பயிரிட்டால் மந்திரி ஆகலாம் என்பது கிராமத்தில் வழக்கத்தில் உள்ளது. அதாவது முந்திரி
பயிரிட்டால் கண்டிப்பாக நஷ்டம் வராது என்பதினையே இவ்வாறு கூறியுள்ளனர். தமிழ்நாட்டில்
புதுக்கோட்டை, விழுப்புரம், கடலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் அதிக அளவில் முந்திரி
பயிரிடப்படுகிறது.
முந்திரி பருப்பின்
முத்தான
நன்மைகள்:
1.முந்திரி பருப்பில் அதிகமாக கலோரி உள்ளது. அதாவது 100 கிராம் முந்திரி பருப்பில் சுமார் 553 கலோரிகள் உள்ளது. மேலும், முந்திரி பருப்பில் நார்ச்சத்து, வைட்டமின்கள், கனிம தாதுக்கள் உள்ளதோடு, நோய்கள் மற்றும் புற்றுநோயினை வராமல் தடுக்க உதவும் தாவர வேதியங்கள் (அ) பைட்டோகெமிக்கல்ஸ் அதிக அளவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
2. முந்திரி பருப்பில்
இதயத்திற்கு நன்மை தரக்கூடிய ஒற்றை
நிறைவு பெறாத கொழுப்பு அமிலங்களான
(monounsaturated-fatty acids) ஒலியிக்
மற்றும் பால்மிட்டோலெயிக் அமிலங்கள் அதிக அளவில் காணப்படுகிறது.
இத்தகைய கொழுப்பு அமிலங்கள் உடலுக்கு தீமை விளைவிக்ககூடிய
கொலஸ்டிராலை (low-density lipoprotein cholesterol) குறைத்து நன்மை தரக்கூடிய கொலஸ்டிராலை
(high-density lipoprotein cholesterol) அதிரிக்க செய்கிறது. மேலும்
, ஒற்றை
நிறைவு பெறாத கொழுப்பு அமிலங்கள்
கரோனரி இதய நோயினை தடுக்க
உதவும் என்று சமீபத்திய ஆராய்ச்சி
முடிவுகள் மூலமாக அறியமுடிகிறது.
3.முந்திரி பருப்பில் மாங்கனீசு,
பொட்டாசியம், தாமிரம், இரும்பு, மெக்னீசியம், துத்தநாகம் மற்றும் செலினியம் கனிம
தாதுக்கள் அதிக அளவில் உள்ளது.
ஒரு நாளைக்கு ஒரு சில முந்திரி
பருப்புகளை உணவில் சேர்த்துக்கொண்டாலே
மேற்கூறிய கனிம தாதுக்கள் குறைப்பாட்டினால்
வரக்கூடிய நோய்களை தடுக்கலாம்.

4. முந்திரி பருப்பில் காப்பர்
அதிக அளவில் உள்ளது. இது
பல முக்கியமான நொதிகளுக்கு இணை காரணியாக செயல்படுகிறது,
காப்பர், மாங்கனீசு மற்றும் துத்தநாகம் போன்ற
தாதுக்களானது சைட்டோகுரோம் சி ஆக்ஸிடேஸ் மற்றும்
சூப்பர் ஆக்சைடு டிஸ்முடேஸ் நொதிகளுக்கு இணை காரணிகளாக உள்ளது.
மேலும் காப்பரில் உள்ள தைரோசினேஸ் ஆனது, தைரோசினை
மெலனின் ஆக மாற்றுகிறது. மெலனின்
முடி மற்றும் தோலுக்கு நிறம்
கொடுக்கும் நிறமி ஆகும்.
5. முந்திரி பருப்பிலுள்ள
துத்தநாகம் பல்வேறு நொதிகளுக்கு இணை
காரணியாக உள்ளதோடு, வளர்ச்சி, விந்து
உற்பத்தி, செரிமானம் மற்றும் நியூக்ளிக் அமிலம்
சிதைவடைதலை ஒழுங்குபடுத்துகிறது.
6. முந்திரி பருப்பில்
அத்தியாவசிய வைட்டமின்களான பேண்டோதெனிக் அமிலம் (வைட்டமின் B-5), பைரிடாக்சின்
(வைட்டமின் பி-6), ரிபோபிலாவின் மற்றும்
தையமின் (வைட்டமின் பி-1) அதிக அளவில்
உள்ளன. 100கிராம்
முந்திரி பருப்பில் 0.147 மில்லி கிராம் அல்லது தினசரி
பரிந்துரைக்கப்பட்ட அளவில்
35 சதவீத பைரிடாக்சின் உள்ளது. இத்தகைய வைட்டமின்கள்
செல்களில் புரதம், கொழுப்பு மற்றும்
கார்போஹைட்ரேட் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது.
7. முந்திரி பருப்பில்
குறைந்த அளவிலான சியாசாந்தின் உள்ளது.
இது கண்ணில் உள்ள கரு
விழி படலத்தை பாதுகாக்க உதவுகிறது.
மேற்கூறிய பல்வேறு
பயன்பாடுகள் உடைய முந்திரி பருப்பை
நாமும் உணவில் சேர்த்துக்கொண்டு உடல்
நலத்தோடு வாழ்வோமே!
குறிப்பு: இக்கட்டுரை கலைக்கதிர் அறிவியல் இதழில் விரைவில் வெளிவர உள்ளது. இணையதள வாசகர்களும் படித்து தெரிந்துகொள்வதற்காக வலைப்பூவில் வெளியிடுகிறேன். நன்றி.
I would highly appreciate if you guide me through this. Thanks for the article…
ReplyDeleteTamil News | Tamil Newspaper | Latest Tamil News