Monday, July 25, 2011

நீரிழிவு நோய் - Diabetes


அறிமுகம்:
இன்றைய அவசர உலகில்  மனிதன் பல்வேறு நோய்களோடு இருந்து கொண்டு உணவே மருந்து என்ற காலம் போய் இன்று மருந்தே உணவு என்ற நிலைக்கு மனிதன் தள்ளப்பட்டுள்ளான் என்பது வருத்தத்திற்குறியதே. இந்தியாவில் தற்போது மிக முக்கியமான நோயானது நீரிழிவு நோய் (Diabetes) என்றழைக்கப்படும் சர்க்கரை நோயே ஆகும். ஏனெனில் சர்க்கரை நோய் உள்ளவர்களில் உலக அளவில் இந்தியர்களே முதலிடம் பிடித்துள்ளனர். அதாவது, உலக நீரிழிவு நோய் நிறுவனத்தின்  2009ஆம் ஆண்டு அறிக்கையின் படி சுமார் 50.8 மில்லியன் நோயாளிகள் இந்தியாவில் உள்ளனர். இந்தியாவை தொடர்ந்து சீனா (43.2 மில்லியன்) மற்றும் அமெரிக்கா (26.8 மில்லியன்) நோயாளிகள்  நீரிழிவு நோயுடன் உள்ளனர்.
இதே நிலை தொடர்ந்தால் இந்தியாவானது 2030 ஆம் ஆண்டில்  நீரிழிவு நோயின் தலைநகராக விளங்கும். அதாவது, இந்திய மக்கள் தொகையில் 9 சதவிகதம் பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருப்பார்கள் என்று உலக நீரிழிவு நோய் நிறுவன அமைப்பு (International Diabetes Federation- IDF) கூறுகிறது.
என்ன நண்பர்களே.. தற்போது நீங்கள் நீரிழிவு நோய் மக்களிடையே எந்த அளவில் உள்ளதென அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

நீரிழிவு நோய் என்றால் என்ன?
நீரிழிவு நோய் என்பது மனிதனுக்கு தேவையான இன்சுலினை உடல் உற்பத்தி செய்யாத அல்லது உற்பத்தி செய்த இன்சுலினைப் பலனளிக்கும் விதத்தில் பயன்படுத்த இயலாத நிலைமையே நீரிழிவு நோய் எனப்படுகிறது. அதாவது மனித உடம்பில் சர்க்கரையை உடலுக்குத் தேவையான சக்தியாக மாற்றுவதற்கு இன்சுலின் என்ற நொதி அவசியமாகிறது.  இந்த இன்சுலின் நொதி சரியாக செயல் படவில்லை எனில் இரத்தத்தில் சர்கரையின் அளவு அதிகரித்து இரத்த அழுத்தம் மற்றும் இதயத்திற்கு இரத்தம் சரிவர செல்லாமல் இருதயத்தில் அடைப்பு போன்றவைகள் வருவதற்கு காரணமாகிறது.

நீரிழிவு நோயின் வகைகள்::::
நீரிழிவு நோயானது மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அதாவது, குழந்தைகள் மற்றும் இளம் வயதினரிடையே காணப்படும் நீரிழிவு நோயானது முதல் வகை நீரிழிவு (டைப் 1 டையபடிஸ்) ஆகும். சுமார் 5- 10 சதவிகிதம் நீரிழிவு நோயாளிகள் இந்த முதல் வகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு முக்கிய காரணம் கணையத்தில் சுரக்கும் இன்சுலின் நொதியானது முற்றிலும் சுரக்காமல் அல்லது உற்பத்தி ஆகாமல் உள்ளதே ஆகும். இவர்கள் வாழ்வதற்கு செயற்கையாக இன்சுலினை கொடுத்தே ஆக வேண்டும்.

நீரிழிவு நோயில் மிக பரவலாக காணப்படுவது டைப்-2 டையபடிஸ் எனப்படும் இரண்டாவது வகையே ஆகும்.  இது 45 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு வரும் வரும் நீரிழிவு நோயாகும். அதாவது, இதை பெரும்பாலும் வயாதானவர்களுக்கு வரும் நீரிழிவு நோய் என்று கூறுவார்கள். இந்த வகை நீரிழிவு நோயானது  90-95 சதவிகித  நீரிழிவு நோயாளிகளில் காணப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் இன்சுலின் நொதி போதிய அளவு உற்பத்தியாகமல் உள்ளதும்,  உடல் பருமன் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையே காரணமாக கூறப்படுகிறது. மேலும் இந்த வகையானது பெற்றோர்களிடமிருந்து அடுத்த தலைமுறை சந்ததியினருக்கு செல்லும் என்று சொல்லப்படுகிறது. இந்த டைப் 2 வகை பாதிப்பை கொண்டவர்கள், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்க முடியாமல் இருக்கின்றனர். இதனால் இருதய பாதிப்பு, பக்கவாதம் மற்றும் சிறுநீரகம் மற்றும் கண்கள் போன்றவற்றுக்கு தீவிர பாதிப்பை ஏற்படுத்த வாய்புள்ளது. இந்நோயாளிகள் உடற் பயிற்சி, உடல் பருமனை குறைத்தல் மற்றும் உணவு கட்டுப்பாட்டால் இந்த நீரிழிவு வகையை ஓரளவு கட்டுபடுத்த முடியும்.

மூன்றாவது வகை நீரிழிவானது (டைப் 3 டையபடிஸ்) பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் ஏற்படும் நீரிழிவு நோயாகும். அதாவது, பெண்கள் கர்ப்ப காலத்திற்கு முன்பு தனது இரத்த‌த்தில் அதிகமான சர்கரையின் அளவை (High blood sugar). கொண்டிருக்க மாட்டார்கள். ஆனால் கர்ப காலத்தில் இரத்ததில் அதிக சர்க்கரை அளவை (உயர் இரத்த சர்க்கரை- High blood sugar) கொண்டிருப்பார்கள். கர்ப்பிணி பெண்ணின் கர்ப்ப காலத்தில் தேவைக்கு அதிகமான இன்சுலின் சுரக்காமல் போனதே இந்த  உயர் இரத்த சர்க்கரைக்கு காரணம். பொதுவாக இந்த  நீரிழிவு வகை குழந்தை பிறந்த பின்பு மறைந்துவிடுகிறது.

என்ன உணவு உண்ணலாம்?

நீரிழிவு நோயாளிகள் என்னென்ன உணவு வகைகளை உண்ணலாம் என்பதை அறிய  வேண்டுமெனில் கீழே கொடுக்கப்பட்டுள்ள தினகரன் நாளிதழின் இணைய இணைப்பை (லிங்கை) பார்க்கவும்.

குறிப்பு: : நீரிழிவு நோயை பற்றி நன்கு எழுதுவதற்கு நான் மருத்துவன் அல்ல. ஆதலால் என்னால் இயன்ற அளவு  தமிழில் தொகுத்தெழுதியுள்ளேன். நீரிழிவு நோயை குணப்படுத்துவதில் இனிப்பு துளசியின் (ஸ்டிவியா- Stevia) முக்கியத்துவம் என்ன என்பதை எனது அடுத்த பதிவில் காண்போம். நன்றி.

அறிவியல் வழியே தமிழ் வளர்ப்போம்! அன்னை மொழியை அழிவிலிருந்து மீட்போம்!
குறிப்பு: 2013- ஜீலை மாத அறிக அறிவியல் இதழில் வெளியிட்டுள்ளேன்.2013- ஜீலை மாத அறிக அறிவியல் இதழில் வெளியிட்டுள்ளேன்.

Friday, July 22, 2011

தமிழருடன் வரலாற்று தொடர்புடைய சோற்றுக்கற்றாழையும் அதன் பயன்களும்

அறிமுகம்:
பண்டை காலத்திலிருந்தே சோற்றுக்கற்றாழைக்கும் தமிழனுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.  அதாவது என்னவென்றால், தமிழ் மொழி முதன் முதலில் பேசிய பகுதியை  குமரிக்கண்டம் என்று அழைக்கப்பட்டுள்ளது. ஏனெனில் பழங்காலத்தில் குமரி என்பது ஒரு மூலிகை செடி, இச்செடியினை சோற்றுக் கற்றாழை என நம் தமிழர்கள் அழைத்தனர். மேலும் தமிழர்கள் வாழ்ந்த இடங்களில் (குமரிச் செடிகள்) சோற்றுக்கற்றாழை மிகுந்து இருந்த காரணத்தினால் தமிழர்கள் வாழ்ந்த பாகுதிகளானது குமரிக்கண்டம் என்றழைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சோற்றுக்கற்றாழையானது சுமார்  மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மூலிகை செடியாக பயன்படுத்தி உள்ளதை  நம்மால் அறிய முடிகிறது.

சோற்றுக்கற்றாழையில் பல்வேறு வகையான சிற்றினங்கள் உள்ளது. அவற்றில், அலோ வீரா ஆப்பிரிக்காவை தாயகமாக கொண்டு கிரிஸ், இத்தாலி, வெனிசுலா மற்றும் தென்னாப்பிரிக்காவில் பயிரிடப் படுகிறது. அலோ பார்படேன்ஸிஸ் என்ற சோற்றுக் கற்றாழை வகை இந்தியாவில் ராஜஸ்தான், ஆந்திரா மற்றும் குஜராத் மாநிலங்களிலும், தமிழ்நாட்டில்  சேலம், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களிலும் பயிரிடப்படுகிறது. மேலும் இந்த சோற்றுக்கற்றாழையானது மலையாலத்தில் கட்டவாலா மற்றும் தெலுங்கில் சின்ன கலபன்டா என்றும் அழைக்கப்படுகிறது.

வேதிப்பொருள்கள்:
அலாய்ன் எனும் வேதிப்பொருளானது அலோ வீரா-வில் 50 சதவிகிதமும், அலோ பெரி-யில் 25 முதல் 28 சதவிகிதமும், அலோ பெராக்ஸ்-ல் 10 சதவிகிதமும் உள்ளது. இத்தகைய அலாய்ன் எனும் வேதிப்பொருளில்தான்  பார்பலின், பென்டோசைட்ஸ், ரெசின் மற்றும் சப்போனின் போன்றவை உள்ளடங்கியுள்ளது. இத்துடன் சோற்றுக்கற்றாழையின் சாற்றில் நிறமேற்றிகளான (Dyes) ஆந்த்ரோகுயினோன் மற்றும் குயினோன்கள் உள்ளது. சோற்றுக்கற்றாழை இலைகளின் களி (Gel) யிலிருந்து பெறப்படும் திரவ பானத்தில் கால்சியம், குளோரின்,  சோடியம், பொட்டாசியம் மற்றும் மாங்கனீசு போன்ற சத்துக்கள் உள்ளன.  மேலும் அலோ களி (Gel) யில் வைட்டமின் ஏ, பி1, பி2, பாலிசாக்கரைடுகள் மற்றும் யூரிக் அமிலம் போன்றவகைகளும் உள்ளது.

பயன்களையும் பார்ப்போமே..
1.சோற்றுக்கற்றாழையில் உள்ள மருத்துவப் பொருள்கள் கல்லீரலுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சுபொருள்களை நீக்கி புதிய செல்களின் வளர்ச்சிக்கு வழிவகை செய்கிறது.
2.மது அருந்துவதன் மூலம் உடலில் தங்கும் ஆல்கஹாலை ஆக்ஸிஜனேற்றம் செய்து வெளியேற்ற சோற்று கற்றாழை மூலிகை பொருளாக பயன்படுகிறது.
3.இவ்மூலிகைப் பயிரின் இலைகளில் வழவழப்பாக உள்ள களியை (gel) தினமும் 2-3 சிறு துண்டுகளாக வெட்டி சாப்பிட்டால் உடல் எடை குறையும் என்று ஆராய்ச்சி முடிவுகளில் கூறப்பட்டுள்ளது.
4.மனிதர்களுக்கு காமா மற்றும் புறஊதா கதிர்கள் மூலம் உன்டாகும் தோல் சம்மந்தமான நோய்களை குணப்படுத்த உதவுகிறது.
5. உடலில் ஏற்படும் வெட்டுக் காயங்களை குணப்படுத்தவும், அதன் தழும்புகளை நீக்கவும்  பயன்படுகிறது.
6.சோற்றுக்கற்றாழையிலிருந்து பெறப்படும் திரவ பானங்கள் சுவாச நோய்களை குணப்படுத்த உதவுகிறது.
7. இலையின் சாறு (Juice) வயிற்றுப் புண் நோயை குணப்படுத் உதவுகிறது.
குறிப்பு: இந்த கட்டூரையில் உள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறுவகையான ஆராய்ச்சி கட்டூரைகளில் இருந்து குறிப்பெடுத்து தமிழாக்கம் செய்து தொகுத்து வழங்கி உள்ளேன். சோற்றுக் கற்றாழையை பயன்படுத்துவதாக இருந்தால்  தகுந்த மருத்துவரை ஆலோசித்து பின்பு பயன்படுத்துங்கள்.  நன்றி.

அறிவியல் வழியே தமிழ் மொழி வளர்ப்போம்! தாய்மொழியை அழிவிலிருந்து மீட்போம்!


Tuesday, July 5, 2011

விவசாயி


ஆனி மாதம் போயிடுச்சு
ஆடி பட்டம் வந்துடுச்சி
ஏ புள்ள அடிவானம் கருக்குதடி
கலப்பைய சரி செய்ய
தச்சன்கிட்ட  போறேன்டி
விவசாய பண்ணைக்கு போயிதான்
வெள்ளை பொண்ணி விதை நெல்லு
வாங்கி வாடி என் பொண்ணம்மா…

மழையுந்தான் பெய்ஞ்சிடுச்சி
மண் வாசம் அடிச்சிடுச்சி
ரெண்டு மாடு கட்டிய கலப்பையிலே
நிலத்த நான் உழபோறன் என் கண்ணம்மா…

தொளி அடிச்ச  வயலிலே
மூணு வாரமான நெல் நாற்றெடுத்து
ஒத்த நாற்று முறையிலே நடேன்டி என் செல்லம்மா…

மாசத்திற்கு ஒருமுறை தான்
களையுந்தானெடுத்து
பூச்சி, நோயிலிந்து இயற்கையான மருந்தடித்து
பயிரையும் காத்திடணும் என் முத்தம்மா…

தை மாதம் வந்துடுச்சி, நெல்லும் முத்திடுச்சி,
அறுவடைக்கு ஆளோட
வயலுக்கு வந்துவிடு என் செல்லம்மா….

நல்ல விளைச்சலும் கிடைச்சிடுச்சி
பொங்கலும்தான் வந்துடுச்சி
புது நெல்லெடுத்து சோறு பொங்கிதான்
கதிரவனுக்கு நன்றி  செலுத்தனும் என் கண்ணம்மா…

பெரியவன் ராசா தான் படிக்காம போயிட்டான்
விளைஞ்ச நெல்ல விற்று சின்னவன் குமார
பட்டனத்து பள்ளியிலே சேர்கனும்  என் பொண்ணம்மா

அடுத்த வருடத்திற்கு விதை நெல்ல
வெளியில வாங்கிதான்  விதைக்கனும்
இதுதான விவசாயி நெலமனு சொல்லுடி என் முத்தம்மா.

இராஜேந்திர சோழன்


இராஜராஜ சோழனின் புதல்வனே
அயல் நாட்டிற்கு படையெடுத்த
முதல் இந்திய மன்னனே!

ஈழத்தை போரிட்டு
ஐந்தாம் மஹிந்தா-வை வென்றவனே!

உனது ஆட்சி காலத்தில்
சிங்கப்பூர், மலேசியா,
சுமத்திரா நாடுகளை
போரில் வென்று ஆட்சி புரிந்தவனே!

கங்கை  வரை சென்று
வங்கதேசத்தை வென்று
சோழமண்டலத்திற்கு
கங்கை கொண்ட சோழபுரத்தினை
புதிய தலைநகராய் தந்தவனே!

கங்கை கொண்ட சோழபுரத்தில்
தஞ்சைக்கு நிகரான
சிவன் கோவிலை கட்டியவனே!

கடல்கடந்து
கடாரம் நாட்டை கைப்பற்றிய‌
கடாரம்கொண்டானே!

உலகிற்கு தமிழனின்
வீரத்தை பறைசாற்றிய‌
கங்கைகொண்ட சோழனே!

வரலாற்றில் நீங்கா இடம் பிடித்த‌
உன் புகழ் நீடுழி வாழியவே...!

மாயவரம் சந்தையிலே

மாட்டு வண்டி பூட்டிகிட்டு 
மாயவரம் சந்தைக்குதான்
மாம்பழம் விற்க போறேன்டி
மச்சினிச்சி நீயும்  கொஞ்சம் ஒத்தாசைக்கு வாயேன்டி (ஆண்)

சந்தைக்கு நீ வந்தீனா
தலை நிறய மல்லிப்பூவ‌
மாமன் காரன் வாங்கிதான் வெச்சுடுவேன்
கை நிறய வலையலதான் வலிக்காம போட்டுவேன்.  (ஆண்)

சந்தைக்கு நான் வந்தேன்னா
இராத்திரிக்கு கூப்பிடுவே
சரிபட்டு வராது சஞ்சலமும் கூடாது மாமன்காரா
அதுக்கு வேறாள பாரு என் மாமன்காரா             (பெண்)

மாட்டு வண்டி பூட்டிகிட்டு
மாயவரம் சந்தைக்குதான்
மாமன்காரன் போறேன்டி
மச்சினிச்சி யாரவது ஒத்தாசைக்கு வாங்களேன்டி!    (ஆண்)

கிராமிய காதல் பாடல்


ஆத்தங்கரையோரம் ஐஞ்சு மணிக்கு வாடி
என் அக்கா பொண்ணே... உனக்கு நல்ல கண்ணே
நான் வருவேன் உனக்கு முன்னே! (ஆண்)

ஆத்தங்கரையோரம் கொஞ்சி பேச வாய்யா
என் மாமா பையா
நீ ஒரு டப்பா பையா... (பெண்)

ஏய் ஏரிக்கரையோரம் எட்டு மணிக்கு வாடி
என் அத்தை பொண்ணே உனக்கு முட்ட கண்ணே
நான் வருவேன் உனக்கு முன்னே! (ஆண்)

ஏரிக்கரையோரம் வரேன் மச்சான்
ஏதாச்சும் செய்யலாமா என் மக்கு மச்சான்
நீ சொல்லு மச்சான்... (பெண்)

முந்திரி காட்டுக்கு முந்திகிட்டு வாயேன்டி
என் மாமன் பொண்ணே, அட குட்ட பொண்ணே
நான் வருவேன் உனக்கு முன்னே! (ஆண்)

முந்திரி காட்டுக்கு வந்தேனா
முந்திகிட்டுசெஞ்சிடுவே  என் பொல்லாத மாமா
நான் வரல அது  பொல்லாப்பு மாமா... (பெண்)

கரிச காட்டு பக்கம் காலையிலே வாயேன்டி
காதல் கீதல் பண்ணுவோம்  என் முறைப்பொண்ணே
நான் வருவேன் உனக்கு முன்னே! (ஆண்)

தாலிய கட்டி புட்டு எங்க நீ கூப்பிட்டாலும்
தட்டாம நான் வருவேன் என் முறை மாமா
அதுவரைக்கும் கொஞ்சம் பொறு மாமா... (பெண்)

நிலக்கடலையும் அதன் பயன்களும்

முனைவர் க. அசோக்குமார் உதவிப் பேராசிரியர் வேளாண் துறை, பிரிஸ்ட் பல்கலைக்கழகம், வல்லம், தஞ்சாவூர், 613 403. அறிமுகம்: நிலக்...