Friday, January 13, 2012

பொங்க‌ல் ப‌ண்டிகை எங்க‌ள் பண்டிகை!


உழ‌வ‌னால்...
க‌ழ‌னி திருத்தி
வ‌ய‌லை ந‌ன்கு உழுது
எரு இட்டு
நெல்லினை விதைத்து
க‌ளையெடுத்து,
அறுவடை செய்த நெல்ம‌ணிக‌திர்களை
வீட்டுக்கு கொண்டு வ‌ந்து
புதுநெல்லில் இருந்து
சிறிது எடுத்து
உர‌லில் போட்டு குத்தி அரிசியாக்கி
பொங்க‌ல‌ன்று வீட்டுமுற்றத்தில் கோலமிட்டு
தலை வாழையிலையில் நிறைகுடம் வைத்து
சாணத்தில் பிள்ளையார் பிடித்து
விளக்கேற்றி வைத்து விட்டு
புதுப்பானையின் கழுத்தில்
புதுமஞ்சளை காப்பாக அணிந்து
பானையினுள் அரிசியும்,பாலும்,
சர்க்க‌ரை பாகும்,
ப‌ருப்பும் இட்டு பொங்கி
இஞ்சியும், க‌ரும்பும்,கற்க‌ண்டும்
இய‌ற்கை தெய்வ‌மான‌ க‌திர‌வ‌னுக்கு ப‌டைத்து
குடும்பத்துடன்
 “பொங்கலோ‌ பொங்கல்‌”என்று உறக்க‌ கூவி
கொண்டாடி ம‌கிழும் விழாவே
பொங்க‌ல் பண்டிகை!
பொங்க‌ல் ப‌ண்டிகை
எங்க‌ள் பண்டிகை!
ஒவ்வொரு த‌மிழ‌னின் பண்டிகை!

Friday, January 6, 2012

செயற்கை விதைகள் (Synthetic seeds)


இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் மக்கள் தொகை பெருக்கத்திற்கேற்ப நாம் நமக்கு தேவையான உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து உணவுத்தேவையை பூர்த்தி செய்யவேண்டிய காலகட்டத்தில் உள்ளோம். சமீபகாலமாக வேளாண்மையில் உணவுப் பொருள்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கு பல நவீன யுக்திகளை பயன்படுத்தி வருகின்றனர். அவற்றில் தற்பொழுது உயிரி தொழில் நுட்பவியல் (Biotechnology) துறை சார்ந்த பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது.  இதில் திசுவளர்ப்பு (Tissue culture) முறையின் மூலமாக செயற்கை விதைகள் உருவாக்கப்படுகிறது.  பொதுவாக விதைகளானது பயிர்களில் கருவுறுதல் நடைபெற்றபிறகு சூற்பைகளில் உள்ள சூல்கள் விதைகளாக மாறுகிறது. இவ்விதையில் கருவிற்கு வேண்டிய ஊட்டப்பொருள்கள் சேமித்து வைக்கப்படுகிறது. ஆனால் திசுவளர்ப்பின் மூலமாக இழைமத் திசுவிலிருந்து (Callus) பெறப்பட்ட  கருவுறுக்களை (Embryoids) ஹைட்ரோ ஜெல்லில் (உ.தா: கால்சியம் ஆல்ஜினேட்) சேமித்து வைத்து உறையிடப்பட்டு செயற்கை விதை உருவாக்கப்படுகிறது. எனவே, இத்தகைய பாதுகாக்கப்பட்ட கருவுருக்களை உறையிடப்பட்டு (encapsulation) ஆய்வகங்களில் வளர்க்கப்பட்ட பயிரின் மொட்டுகள், கிழங்கின் பகுதிகள் மற்றும் ஆக்குத் திசுவிலிருந்து பெறப்பட்ட சிறு செடிகளை செயற்கை விதைகள் என்றழைக்கப்படுகிறது.

உடல கருக்கள் (Somatic embryos) சைகோடிக் கருவிற்கு ஒப்பானவை என்றாலும் பாதுகாக்கப்பட்ட சூழ்நிலையில் உள்ள ஆய்வுக்கூடத்தில் மட்டுமே வளர்க்க முடியும். உடல கருவுருக்களுக்கு விதையுறை இல்லாத காரணத்தால் இதை திசுவளர்ப்பு ஊடகத்தில் வளர்ச்சி ஊக்கிகளை (ஆக்ஸின் மற்றும் சைட்டோகைனின்) சரியான விகிதத்தில் கலந்து அதில் இழைமத்திசுவை (காலஸ்) வளர்த்து அதிலிருந்து  கருவுருக்கள் (Embryoids) பெறப்படுகிறது.  செயற்கை விதைகளை எளிதாக நுண்ணுயிர்கள் தாக்கிவிடும் தன்மை கொண்டது. மேலும் இவ்விதைகள் விரைவில் நீரை இழந்து உலர்ந்துவிடும். எனவே, இதை தவிர்ப்பதற்கு கால்சியம் ஆல்ஜினேட் என்ற வேதிப்பொருளால் கருவுருவைச் சுற்றி உறை உண்டாக்கப்படுகிறது. இத்தகைய விதைகள் நிலத்தில் பயிரிடும் போது சூழ்நிலைகளால் பாதிக்காமல் சாதாரண விதைகளைப் போன்றே செயல்படுவதாக பல்வேறு ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றது.

செயற்கை விதையின் வகைகள்:
உற்பத்தி செய்யும் முறையினை பொருத்து செயற்கை விதைகளானது இரண்டு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அவைகளைப்பற்றி கீழே விரிவாக காண்போம்.

1. வேதிப்பொருள் மூலம் உறையிடப்பட்ட விதைகள் (Hydrated seeds)
இந்த முறையில் உடல கருவுருவானது  கால்சியம் ஆல்ஜினேட் என்ற வேதிப்பொருளால் உறையிடப்பட்டு செயற்கை விதைகள் உருவாக்கப்படுகிறது. இவ்விதைகள் 4 முதல் 6 மி.மீ  விட்டம் அளவு கொண்டது. வேதிப்பொருள் மூலம்  உறையிடப்பட்ட செயற்கை விதைகளை நேரிடையாகவோ அல்லது தண்ணீரில் கலந்தோ நிலத்தில் பயிரிடலாம். இந்த முறையில் உருவாக்கிய விதைகளை குறைந்த வெப்பநிலையில் குறைவான காலத்திற்கு மட்டுமே சேமித்து வைக்க முடியும்.

 2. உலர்த்திய விதைகள் (Desiccated seeds)
இம்முறையில் பாலி ஆக்ஸி எத்திலின் கிளைக்கால் என்ற உறையிடும் பொருளினால் செயற்கை விதைகள் உருவாக்கப்படுகிறது. உலர்த்தப்பட்ட உடல கருவுருக்களை பாலிஆக்ஸி எத்திலின் கிளைக்கால் (PEG) உடன் கலந்து  உடல கருவுருக்களுக்கு உறையிடப்படுகிறது. இந்த உறையிடப்பட்ட விதைகளை சிறிது நேரம் உலர வைக்கப்பட்டு செயற்கை விதைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தமுறையினால் கருவுருக்கள் அதிகமாக சேதாரமடைவதற்கு வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.


செயற்கை விதைகளை உருவாக்கும் வழிநிலைகள் 
(Procedure for production of Synthetic seeds)


தாவர வகைகளைப் பொறுத்து செயற்கை விதைகளை உற்பத்தி செய்யும் வழிநிலைகள்/ தொழில் நுட்பம் வேறுபடுகிறது.

செயற்கை விதையின் பயன்கள்:
வேளாண்மையில் செயற்கை விதையானது பல வகையான பயன்பாடுகளை கொண்டுள்ளது. ஆனால் செயற்கை விதையின் பயன்பாடுகள் சிற்றினங்களுக்கிடையே வேறுபடுகிறது. செயற்கை விதை பொதுவாக தன் மகரந்த சேர்க்கையுறும் தாவரங்களுக்கு பயன்படுவதில்லை. ஆனால் அயல் மகரந்தச் சேர்க்கையுறும் (Cross pollinated) தாவரங்களில் இது பற்பல பயன்பாடுகளை கொண்டுள்ளது. இதன் பல்வேறுவகையான பயன்களை கீழே காண்போம்.

1.மலட்டுத்தன்மையுடைய (Sterility) அல்லது விதையினால் உற்பத்தி செய்ய இயலாத பயிர்களை அதிக அளவில்  இனப்பெருக்கம் செய்து பயிரிடுவதற்கு உதவுகிறது.
 2.கலப்பின விதைகளை உருவாக்குவதற்கு செயற்கைவிதையில் மிகப்பெரிய வாய்ப்புள்ளது. (உ.தா) மகர்ந்தச்சேர்க்கையுறாத (அல்ஃபால்பா), பூ ஒட்டிக்கொள்ளுதல் (பருத்தி), மகரந்த முன்முதிர்வு (சோயாபீன்ஸ்), ஆண் மலட்டுத்தன்மை (தக்காளி & தர்பூசனி) போன்ற தாவரங்களில் கலப்பின விதைகள் உருவாக்குவது கடினம். ஆனால் செயற்கை விதை முறையைப் பயன்படுத்தி மேற்கூறிய பயிர்களில் கலப்பின விதைகளை உருவாக்க முடியும்.
3.செயற்கை விதைகள் தூயதன்மை (Purity) உடையது.
4.மரபியல்படி வேறுபாடுடைய தாவரங்களை (Genetically heterozygous plants) செயற்கை விதைகள் மூலமாக சேமித்துவைக்க முடியும்.
5. கடின விதைகள் (Recalcitrant seeds) வகைகளையும் செயற்கை விதை முறையில் உற்பத்தி செய்யலாம்.
6.குறைவான காலத்தில் புதிய வகை செயற்கைவிதைகளை அதிக அளவில் உற்பத்தி செய்ய இயலும்.
7.செயற்கை விதைகளை வருடத்தின் எந்த நேரத்திலும், எந்த பருவத்திலும் உற்பத்தி செய்ய முடியும்.
8. மரபுத்தன்மையை பாதுகாக்க செயற்கை விதைகள் பயன்படுகிறது.
9.செயற்கை விதைகளின் விலை கலப்பின விதைகளைவிட  குறைவு.
10.கலப்பின முறையின் மூலமாக கிடைத்த தாவரத்தை பெருக்குவதற்கும் செயற்கை விதை உதவுகிறது.

வியபார ரீதியாக செயற்கை விதை உருவாக்குவதில் ஏற்படும் பிரச்சினைகள்
1.செயற்கை விதைகளை அதிக அளவில் உற்பத்தி செய்வதற்கு தரமான உடல கருவுருக்கள் தேவைப்படுகிறது. ஆனால் தற்போதுள்ள சூழ்நிலையில் உடல கருவுருக்கள் அதிக அளவில் கிடைப்பது அரிதாக உள்ளது.
2.ஊட்டச்சத்துகள் மற்றும் ஆக்ஸிஜன் குறைபாட்டினால் செயற்கை விதைகளின் முளைப்புத்திறன் குறைகிறது.
3.செயற்கை விதைகள் திசுவளர்ப்பு முறையில் வளர்க்கப்படுவதால் உடலச்செல் வளர்ப்பில் வேறுபாடுகள் (Somaclonal variation) காணப்படுகிறது.




Thursday, December 1, 2011

மாறாத மனிதர்கள்...


காற்றடித்தால்
புழுதி பறக்கும் மண் சாலைகள்
தார் சாலைகளாய்...

தாவ‌ணி அணிந்து வ‌ந்த‌
க‌ன்னிய‌ர்க‌ள்
மிடி, சுடியுட‌ன்...

கிட்டி புல் விளையாடிய‌
சிறுவ‌ர்க‌ள் கையில்
கிரிக்கெட் ம‌ட்டைக‌ள்...

த‌பாலில் த‌க‌வ‌ல்
அனுப்பிய‌வ‌ர்க‌ள்
அலைபேசியில்...

மாட்டு வ‌ண்டியில்
ப‌ய‌ணித்த‌வ‌ர்க‌ள்
விமான‌த்தில்...

காகிதத்தில்
காத‌லை சொல்லிய‌வ‌ர்க‌ள்
க‌ணிப்பொறியில்..

ம‌ழை பொழிந்தால்
நீர் ஒழுகும் கூரைவீடுக‌ள்
அடுக்குமாடி வீடுகளாய்...

எல்லாம் மாறியும்
மாறவில்லை
ம‌னித‌ர்க‌ளின் சாதி, மதச் ச‌ண்டைக‌ள்!


Friday, November 18, 2011

உலகில் முதன் முதலாக துவரையின் மரபணு வரிசையினை கண்டறிந்த இந்திய வேளாண் விஞ்ஞானிகள்


துவரை அறிமுகம்
இந்தியாவை தாயகமாக கொண்ட துவரை (Red gram or Pigeon pea) பயிரானது, இந்தியா, தென் கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் பயறு வகை பயிர்களில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.  இந்நாடுகளே 85 சதவிகிதத்திற்கும் அதிகமான துவரையினை உற்பத்தி செய்து பயன்படுத்தி வருகிறது. துவரம் பருப்பானது  இந்திய உணவு வகைகளான தாள் (Dal) மற்றும் சாம்பார் தயாரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும்  இப்பருப்பில் புரதங்கள் மற்றும்  வைட்டமின்கள்  போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் உள்ளது. இந்த பயிரின் இலைகள் மற்றும் உமிகள் கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்தப்படுகிறது.

துவரையில் மரபணு வரிசைப்படுத்துதல்
மரபணு வரிசை(Genome sequencing)  கண்டறியும்  ஆய்விற்கு 'ஆஷா' (ICPL87119) என்ற துவரை இரகம் பயன்படுத்தப்பட்டது. ஆஷா இரகத்தின் இலையிலிருந்து  உயர் தரமான  டி என் ஏ (DNA) பிரித்தெடுக்கப்படுகிறது. பின்பு இந்த டி என் ஏ க்களை  மரபணு வரிசைபடுத்தும் இயந்திரத்தினுள் வைத்து  மரபணு வரிசைப்படுத்தப்படுகிறது. இந்த ஆய்வின் முடிவில் 511 Mb அளவுள்ள மரபணு வரிசை, 47,004 புரத குறியீட்டு மரபணுக்கள் (protein coding genes) மற்றும் 12,511 இடமாற்றக்கூடிய மூலகங்கள் (transposable elements) தொடர்புடைய மரபணுக்களை கண்டறிந்துள்ளனர்.  மேலும் இந்த ஆராய்ச்சியில் 1,213 நோய் எதிர்ப்பு திறனுடைய மரபணுக்கள் மற்றும்  உயிரற்ற அழுத்தத்தை (abiotic stress) தாங்கி வளரக்கூடிய 152 மரபணுக்களை கண்டறிந்துள்ளனர். உயிர் தகவலியல்(Bioinformatics) மென்பொருள் BLAST  உதவியுடன்  துவரையின் புரத குறியீட்டு மரபணுக்களோடு சோயாபீன்ஸ் புரத குறியீட்டு மரபணுக்களை ஒப்பிட்டு செய்து பார்த்த போது இவ்விரண்டு பயிர்களுக்கிடையே 67.94 %  புரத குறியீட்டு மரபணுக்கள் ஒரே மாதிரி உள்ளது என கண்டறிந்துள்ளனர்.

இந்த ஆராய்ச்சியினை இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (Indian Agricultural Research Institute) உட்பட்ட தேசிய உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சிமையம் (NRCPB-டெல்லி), பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம்(வாரனாசி), இந்திய பயறு வகை ஆராய்சி நிறுவனம்(கான்பூர்), வேளாண் அறிவியல் பல்கலைக் கழகம் (தார்வார்ட், கர்நாடகா), மற்றும் பஞ்சப்ராவ் தேஷ்முக் கிருஷி வித்யாபீடம்(அகோலா, மகாராஷ்டிரா) விஞ்ஞானிகளால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெற்றிகரமாக உலகில் முதன்முதலில் துவரையின் மரபணு வரிசையினை கண்டறிந்த இந்திய விஞ்ஞானிகளை நாமும் மனதார வாழ்த்துவோமே!
நன்றி: J. Plant Biochem. Biotechnol. (October, 2011), DOI 10.1007/s13562-011-0088-89.

குறிப்பு: இச்செய்தி வெளியிட தகவல்கள் தந்த நண்பர்கள் மற்றும் வேளாண் ஆராய்சியாளர்களான திரு. குமர குருபரன் மற்றும் முனைவர். கோவிந்தராஜ் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

Monday, October 24, 2011

சிவப்பு ஒயினில் உள்ள ரெஸ்வெராட்ரால் மார்பக புற்றுநோய் வளர்ச்சியை தடுக்கிறது


ரெஸ்வெராட்ரால் (Resveratrol) என்பது சிவப்பு ஒயினில் உள்ள "ஆரோக்கியமான" மூலப்பொருள் ஆகும். இது, ஈஸ்ட்ரோஜன் வளர்ச்சியை தடுப்பதன் மூலம் மார்பக புற்றுநோய் செல்கள்  வளர்ச்சியை தடுத்து நிறுத்துகிறது என்று சமீபத்திய ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது.

இந்த ஆராய்ச்சியை இத்தாலியில் உள்ள காலப்ரியா பல்கலைக்கழகம் (University of Calabria) மற்றும் அமெரிக்காவில் உள்ள பேய்லர் மருத்துவ கல்லூரியும் (Baylor College of Medicine) இணைந்து செய்துள்ளது. இந்த ஆராய்ச்சியில் ரெஸ்வெராட்ட லானது  ஹார்மோன் எதிர்ப்பு மார்பக புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது என்று  முதல் முறையாக விஞ்ஞானிகள்  கூறுகின்றனர்.

இந்த ஆராய்ச்சி செய்வதற்கு, ரெஸ்வெராட்ராலின் விளைவுகள் எப்படி உள்ளது என்பதை சோதிக்க ஈஸ்ட்ரோஜன் மார்பகபுற்றுநோய் செல் வரிசைகள் (Cell lines) பயன்படுத்தப்பட்டது. பின்பு ஆராய்ச்சியாளர்கள் ரெஸ்வெராட்டல் சிகிச்சையளித்த செல் வரிசை மற்றும் ரெஸ்வெராட்டல் சிகிச்சையளிக்காத செல் வரிசைகளில் புற்று நோயிற்கு காரணமான செல்வளர்ச்சி எவ்வாறு உள்ளது என் ஒப்பிட்டு பார்த்தனர். சிகிச்சை அளிக்கப்படாத(untreated) செல்களில் எந்தவித மாற்றமும் இல்லை. ஆனால் ரெஸ்வெராட்டல் சிகிச்சையளித்த(treated) செல் வரிசையில் புற்றுநோய்க்கு காரணமான செல்களின் வளர்ச்சி குறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

வருங்காலத்தில் மார்பக புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுப்பதில் ரெஸ்வெராட்ரால் ஒரு சாத்தியமான மருந்தியல் தீர்வாகும் என்றால் அது மிகையாகாது.

ஒயின்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமெனில் என்னுடைய முந்தைய பதிவின்  இணைப்பை பார்க்கவும்.
http://ashokkumarkn.blogspot.com/2011/09/blog-post.html

நன்றி :  The FASEB Journal, October 2011.
குறிப்பு: இந்த பதிவு சமீபத்திய‌ ஆய்வுமுடிவே தவிர ஒயின் அருந்த ஊக்கப்படுத்தும் பதிவல்ல. மேலும் மார்பக புற்று நோயை குணப்படுத்த தகுந்த மருத்துவரிடம் ஆலோசனை பெறவும்.

Saturday, October 22, 2011

கடுமையான வறட்சியினால் நிரந்தர சூழியலமைப்பில் சீர்குலைவு உண்டாகிறது



அடிக்கடி ஏற்படும் வறட்சி மற்றும் கடுமையான வறட்சியின் காரணமாக நிலத்தடி நீரானது மிக வேகமாக கீழிறங்குதல் மற்றும் நீரூற்றுகள் வற்றி பாலைவன சுற்றுச் சூழலுக்கு தள்ளப்படுவதால் பல அரிய வகை உயிரினங்களை அழிவிலிருந்து மீட்க முடியாது என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது. இந்த ஆராய்ச்சியை அமெரிக்காவில் உள்ள ஒரேகான் மாநில பல்கலைக்கழகம் (Oregon State University) கடந்த எட்டு வருடமாக ஆய்வு செய்துள்ளது.

காலநிலை மாற்றம் (Climate change) மற்றும் மக்கள் தொகை பெருக்கத்தினால் மனித பயன்பாட்டிற்கு நிலத்திலிருந்து அதிக அளவில் தண்ணீரை  எடுத்து உபயோக படுத்துதலினாலும் நிலத்தில் வாழும் உயிரினங்களின் வாழ்நிலை பாதிக்கிறது. மேலும் பல ஆண்டுகள் தொடர்ச்சியாக கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்ட நிலத்தில் பல்வேறு வகையான அரிய தாவர இனங்கள், பூச்சி இனங்கள் அடியோடு அழிந்து விடுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் காடுகளை அழிவிலிருந்து பாதுகாப்பது மற்றும் புதியதாக அதிக அளவில் மரங்களை நடுதல் போன்றவை மிக முக்கியமாக கருதப்படுகிறது. எனவே, காலநிலை மாற்றத்தினை நம்மால் இயன்ற அளவு குறைக்க நாமும் உதவிசெய்வோம். அரிய வகை உயிரினங்களை அழிவிலிருந்து காப்போம்!

நிலக்கடலையும் அதன் பயன்களும்

முனைவர் க. அசோக்குமார் உதவிப் பேராசிரியர் வேளாண் துறை, பிரிஸ்ட் பல்கலைக்கழகம், வல்லம், தஞ்சாவூர், 613 403. அறிமுகம்: நிலக்...